எழுதாத பேனாவிற்கு எதற்கு கடலில் சிலை - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி?
தேமுதிகவை கேப்டன் விஜயகாந்த் அவர்களை தவிர , யாரும் இயக்கவில்லை, இயக்கவும் முடியாது - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் நன்கு அறிமுகமானவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அவரை பார்க்கும் போது விஜயகாந்தை பார்ப்பது போல் மக்கள் எண்ணுகிறார்கள். அதனால் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் என நம்பிக்கை உள்ளது. மேலும் ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் எனவே தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை இந்த ஈரோடு இடைத்தேர்தல் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம். இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா அல்லது பணநாயகமா, அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே ஒன்றாகும்.
எழுதாத பேனாவுக்கு நினைவு சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது ஆகும். அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது. எங்களது கட்சியை யாரும் பின் நின்று இயக்கவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டுமே இயக்குகின்றார். மக்கள் வரிப்பணத்தை கொண்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய திட்டங்கள் இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. இந்நிலையில் இது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பது உறுதி. தேமுதிகவை பொறுத்துவரை தேர்தல்களில் தனியாக நின்று பல சாதனைகளை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இடைத்தேர்தல் முடிந்த பிறகு தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டபடும் அதில் சில முக்கிய அறிவிப்புகளை தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார். 2024 தேர்தலில் நிலைபாடுகளை குறித்து உரிய நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கபடும். திமுக ஆட்சியின் மீது மக்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர்” என கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்