12 மணி நேர வேலை சட்ட மசோதாவை வரவேற்கிறோம் - விக்கிரமராஜா
12 மணி நேர வேலை சட்ட மசோதாவை வரவேற்கிறோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
திருச்சியில் UPVG கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அமைத்து தரும் பணியாளர்களை ஒருங்கிணைத்து Tamilnadu UPVC Windows And Doors Fabricating Owners Association - என்ற பெயரில் மாநில அளவிலான புதிய சங்க துவக்க விழா இன்று நடைபெற்றது. திருச்சி அரிஸ்டோ காம்ப்ளக்ஸ் நியூ டயமண்ட் மஹாலில் நடைபெற்ற இச்சங்க துவக்க விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா, பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, உள்ளிட்ட ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற மசோதாவை அரசே நிறைவேற்றியதற்கு பேரமைப்பு சார்பில் மனமார்ந்த வரவேற்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். இன்றைய காலகட்டத்தில் உழைப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கணிசமாக குறைக்க வேண்டும். தற்போது உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடாக இந்தியா உருவாகி உள்ளது. ஆகவே அனைவரும் பில் போட்டு பொருட்களை வாங்க வேண்டும். அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற சிந்தனையை அரசு உருவாக்க வேண்டும்.
மேலும் ஈரோட்டில் நடைபெறும் வணிகர் தின மாநாட்டில் 5 அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். இதில் வணிகர்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு இடர்பாடுகளை தீர்மானமாக நிறைவேற்ற இருக்கிறோம். அரசுத்துறை அதிகாரிகள் ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது, வணிகர் சங்க பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை செய்துதான் அதை அறிவிக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு சட்டம், சாமானிய வணிகர்களுக்கு ஒரு சட்டம் என நிறைவேற்றுகிறார்கள். மக்களுக்கு ஆரோக்கியமான உணவு தர நாங்கள் தயாராக இருக்கிறோம். அதில் கலப்படம் என நிரூபித்தால் எந்த தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் எங்கு உற்பத்தி செய்கிறார்களோ, அங்கு சோதனையிட்டு தண்டனை கொடுக்க வேண்டும். சாமானிய கடைக்குள் நுழைந்து ஆய்வு செய்து தண்டனை வழங்குவதை நாங்கள் ஏற்க முடியாது. சாலையோர வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி கடைகள் அமைக்க வேண்டும். அவ்வாறு அவர்களை அங்கீகரித்தால் அதில் எங்களுக்கு மாற்ற கருத்து இல்லை. 12 மணி நேரம் வேலை செய்தால் தான் இப்போதுள்ள போட்டி உலகத்தில் சமாளிக்க முடியும் என்பதால் அந்த சட்டத்தை வரவேற்கிறோம். 24 மணி நேரமும் கடையை இயக்கலாம் என்ற சட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். எங்காவது காவல்துறையினர் இடையூறு செய்தால் அதை உடனடியாக முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்வோம்" என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்