தமிழ்நாட்டில் பெண் தலைவா்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - விஜய பிரபாகரன்
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து உரிய நேரத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவிப்பார் - விஜய பிரபாகரன்
தமிழ்நாட்டில் தேமுதிக கட்சியை பலப்படுத்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமதா விஜயகாந்த் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களுக்கும் விஜய பிரபாகரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் பலப்படுத்தும் நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசனை செய்து அறிவுரைகள் வழங்கி வருகிறார்.
மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, தேமுதிக வின் இருக்கக்கூடிய அணிகளை பலப்படுத்துவது, புதிய நிர்வாகிகள் பதவி வழங்குவது, குறிப்பாக வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தமிழ்நாட்டில் வலுவான கட்சியாக அமைவதற்கு திட்டங்கள் வகுப்பது குறித்து மாவட்ட தோறும் இருக்கக்கூடிய தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய தேமுதிக நிர்வாகிகளை அழைத்து பல்வேறு கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டது. மேலும் நிர்வாகிகள் மத்தியில் இருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேமுதிக கட்சி நிா்வாகி இல்ல நிகழ்ச்சி, பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியில் கட்சி கொடியேற்றி வைக்கும் நிகழ்ச்சியில் விஜய பிரபாகரன் கலந்துக்கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளா்களை சந்தித்த விஜய பிரபாகரன் கூறியது..
தமிழ்நாட்டில் பல இடங்களில் கொலை, கொள்ளை ,கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை உடனடியாக தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. ஆகையால் எனது அம்மா பிரேமலதா விஜயகாந்த், தமிழிசை சௌந்தரராஜன், செல்வ பெருந்தகை ஆகியோருக்கு வழங்கப்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்பை விலக்கி கொண்டுள்ளனா்.
தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பெண் தலைவா்களுக்கு, குறிப்பாக பிரேமலதா விஜயகாந்த், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக வழங்க வேண்டும். பாஜக, திமுகவுடன் உறவு வைத்திருப்பதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்.. திமுக ஒரு சந்தா்ப்பவாத கட்சி என தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் வரவிருக்கும் எந்த தேர்தலாக இருந்தாலும் தேமுதிக சந்திக்க தயாராக உள்ளது.
மேலும், 2026 சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் உள்ளாட்சித் தோ்தலில் இதே கூட்டணி தொடருமா, வேறு கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்த முடிவை தேமுதிக கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சரியான நேரத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்.