Udhayanidhi: "அடிமைகள், சங்கிகள், பாசிசம்.." எதிர்க்கட்சிகளை விளாசிய உதயநிதியின் அனல்பறந்த பேச்சு
திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை விமர்சித்து அனல்பறக்க பேசினார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க திமுக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி என கூட்டணியை வலுப்படுத்தி உள்ளது.
எஞ்ஜின் இல்லாத கார்:
கடந்த தேர்தலில் மு.க.ஸ்டாலினின் தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட திமுக, இந்த தேர்தலிலும் அவரது தலைமையிலே எதிர்கொள்கிறது. அதேசமயம், கடந்த தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின் இந்த தேர்தலில் முக்கிய முகமாக உருவெடுத்துள்ளார். ஸ்டாலினுக்கு அடுத்து திமுக-வின் தலைவர் பொறுப்பிற்கு தயாராகி வரும் உதயநிதி ஸ்டாலின் இன்று நடந்த திருவண்ணாமலை கூட்டத்தில் அனல் பறக்கும் அளவிற்கு பேசினார்.
முதலைமச்சர் மு.க.ஸ்டாலினை காட்டிலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இன்று அதிக நேரம் இருந்தது. எதிர்க்கட்சியான அதிமுக-வை எஞ்ஜின் இல்லாத கார் என்றும், அதிமுக-வினரை அடிமை என்றும் சரமாரியாக விமர்சித்தார். மேலும், அதிமுக-வை பாஜக-விடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கூறுவதாகவும் பேசினார்.
அடிமைகள், பாசிசம்:
இதுமட்டுமின்றி அமித்ஷாவிற்கும் சவால் அளிக்கும் வகையில் தமிழ்நாடு தனித்துவம் வாய்ந்தது, சங்கிககளால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்றும் பேசினார். அமித்ஷா- எடப்பாடி பழனிசாமியின் கூட்டணியான பாஜக - அதிமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசியதுடன் பழைய அடிமைகள், புது அடிமைகள் என்றும் விமர்சித்து பேசினார்.
இதுமட்டுமின்றி தவெக-வை விமர்சித்து பேசியதுடன் கட்டுப்பாடு இல்லாத ஒரு கோடி இளைஞர்கள் திரண்டாலும் பயன் இல்லை என்று விமர்சித்தார். இதுமட்டுமின்றி, கட்சியில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக வரும் சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிகளவு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இது இளைஞரணி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியது.
அனல் பறந்த பேச்சு:
கட்சியில் மூத்த உறுப்பினர்கள் மீது கடும் சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்த நிலையில் மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரிக்கும் வகையிலே இந்த கோரிக்கையை உதயநிதி முன்வைத்துள்ளார். இன்று நடந்த திருவண்ணாமலை திமுக வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அனல் பறந்த பேச்சு முன்பு இருந்த கூட்டங்களில் காட்டிலும் தனித்துவமாக அமைந்தது. இனி வரும் கூட்டங்களிலும் அவரது பேச்சு இதுபோன்றே இருக்கும் என்று கருதப்படுகிறது.





















