கன்டெய்னர் லாரி மோதியதில் பிளஸ் 2 மாணவர் உள்பட 2 பேர் உயிரிழப்பு!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே +2 பொதுத்தேர்வு எழுதும் முன்னரே விபத்தில் பரிதாபமாக மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தெற்கு இடையபட்டியை சேர்ந்தவர் அந்தோணிபீட்டர் (வயது 55). தையல் தொழிலாளி. நேற்று இவரும் பன்னாங்கொம்பை சேர்ந்த உறவினரான 12ஆம் வகுப்பு மாணவர் பிலோமின்தாஸ் (18) என்பவரும் டி.உடையாபட்டியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். அப்போது மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் எதிரே வந்த கன்டெய்னர் லாரி திடீரென்று அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அந்தோணிபீட்டர், பிலோமின்தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனையடுத்து டிரைவர் கண்டெய்னர் லாரியை நிறுத்தாமல் சென்றார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் லாரியை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனாலும் லாரி டிரைவர் நிறுத்தாமல் சென்றார். இதனையடுத்து பொதுமக்கள் மணப்பாறை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து பொதுமக்கள் கன்டெய்னர் லாரியை விரட்டி சென்றனர். மணப்பாறையில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே ஆம்புலன்ஸை சாலையின் குறுக்கே நிறுத்தி கன்டெய்னர் லாரியை மடக்கி பிடித்தனர்.
அப்போது, டிரைவர் குடிபோதையில் இருந்ததும், விபத்தை ஏற்படுத்திவிட்டு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு லாரியை நிறுத்தாமல் வந்ததும் தெரியவந்தது. பின்னர் பொதுமக்கள், லாரி டிரைவரை பிடித்து புத்தாநத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கன்டெய்னர் லாரி டிரைவர் மணப்பாறையை அடுத்த பெரிய அணைக்கரைப்பட்டி சக்கம்பட்டியைச் சேர்ந்த டேவிட் ஆனந்தராஜ் (37) என்றும், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் இருந்து நூல்களை ஏற்றிக் கொண்டு கோலப்பூர் என்ற ஊருக்கு சென்று கொண்டிருக்கும்போது, விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. மேலும் விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய பின் லாரியை தாறுமாறாக ஓட்டி சாலையில் சென்றவர்கள் மீது மோதுவது போல் சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கன்டெய்னர் லாரி டிரைவர் டேவிட் ஆனந்தராஜை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மணப்பாறை அருகே ஓட்டுனரின் மது போதையால் தறிகெட்டு ஓடிய கண்டெய்னர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 12 ம் வகுப்பு பள்ளி மாணவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு. நிற்காமல் சென்ற லாரியை 10 கி.மீ. தூரத்திற்கு அப்பால் மணப்பாறையில் மடக்கிப் பிடித்த பொதுமக்கள். இன்று பொதுத்தேர்வு எழுத இருந்த நிலையில் விபத்தில் மாணவர் உயிரிழந்தது அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் டிரைவர்களால் பல குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.