Trichy: வயலூர் சாலையை மரண சாலையாக பார்க்கும் மக்கள் - மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?
திருச்சி வயலூர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், விபத்துக்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
திருச்சி மாநகர், வயலூர் சாலை மிக முக்கியமான சாலையாக உள்ளது. குறிப்பாக இந்த பகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அதிக அளவில் இயங்கி வருகிறது. அதே சமயம் வயலூர், அல்லிதுரை, சோமரசன்பேட்டை, ரெட்டவாய்கால் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் வேலைக்கு செல்பவர்கள், தின கூலி மக்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் என எப்போதுமே பரபரப்பாக வாகன போக்குவரத்து மிகுந்த சாலையாக இருக்கும். இந்நிலையில் காலை, மாலை இரண்டு நேரங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது தொடர் கதையாக உள்ளது. ஆகையால் சாலையை விரிவுபடுத்த வேண்டும், போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் பல முறை கோரிகையை முன்வைத்தனர். ஆனால மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனை தொடர்ந்து திருச்சி மாநகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும், சாலைகள் சீரமைத்தல், பாதாள சாக்கடை அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாநகரில் பல இடங்களில் சாலைகள் தோண்டபட்டு , பணிகள் முடிந்தாலும் சீர் செய்யாமல் அப்படியே போடபட்டதால் பல்வேறு விபத்துகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் வயலூர் சாலையில் கடந்த 6 மாதங்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது, இதனை தொடர்ந்து சாலை நடுவே பள்ளம் தோண்டி குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்தது. ஆனால் பணிகள் முடிந்தும் சாலையை சீர் செய்யாமல் மெத்தன போக்கில் மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அதேசமயம் விபத்துகளும் தொடர்ந்து அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் உயர் கொண்டான் பாலம் அருகே சாலை நடுவே பள்ளம் தோண்டபட்டு சரியாக சீர் அமைக்கததால், அந்த வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த வங்கி ஊழியர் லாரி சக்கரம் தலை மேல் ஏறி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டைவாய்க்கால் பகுதியில் கல்லூரி மாணவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். ஆகையால் பொதுமக்கள் வயலூர் சாலையில் பயணம் செய்ய வேண்டும் என்றாலே அச்சமாக உள்ளது என தெரிவிக்கிறார்கள்.
மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறியது.. வயலூர் சாலை முழுவதுமே பாதாள சாக்கடைக்கு வெட்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் ஆங்காங்கே உள்ளது. தொடர்ந்து அந்த சாலையில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் முக்கிய கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள் அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் அந்த சாலையை பயன்படுத்த வேண்டி உள்ளது. இந்த நிலையில் பல மாதங்களாக அந்த சாலை மிகவும் மோசமாக பயணிக்க முடியாத நிலையில் உள்ளதால் தினமும் விபத்துகள் அதிகரித்துக் கொண்டு உள்ளது. சரிவர மூடப்படாத பாதாள சாக்கடை பள்ளத்தினால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து சிரமங்களை வருகின்றனர். தொடர்ந்து இந்த சாலைகளில் தினமும் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுவதும் சிலர் விபத்தில் மரணம் அடைவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த சாலையில் பயணிக்கும் அனைவரும் மரண சாலையாக மாறி உள்ளதாக கூறி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆகையால் உடனே மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சாலைகளை சீர் செய்ய வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.