திருச்சி சமயபுரம் கோயில் இணை ஆணையரை கண்டித்து கடையடைப்பு போராட்டம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் கோயில் நிர்வாகத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம், 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிந்ததால் பரபரப்பு.
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசனம் செய்வதற்காக, தினமும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், கோவில் நிர்வாகம் சார்பில் 100 ரூபாய் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசன வரிசையில் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமயபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கட்டணமின்றி கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமயபுரம் கடை வீதி, சன்னதி வீதி, வியாபாரிகள் சங்கம் மற்றும் கிராம மக்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், சமயபுரம் நால்ரோட்டில் இருந்து கருப்பு பட்டை அணிந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம், லால்குடி துணை சூப்பிரண்டு அஜய்தங்கம், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த அழைத்தனர்.
இதையடுத்து சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தின் மாடியில் லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியம், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மண்ணச்சநல்லூர் தாசில்தார் அருள்ஜோதி, போலீஸ் அதிகாரிகள் ஆகியோர், முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அவர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்ட அதிகாரிகள், இப்பிரச்சினை குறித்து கலெக்டருடன் கலந்து ஆலோசித்து ஓரிரு நாட்களில் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக நேற்று கடைவீதி, சன்னதி வீதி ஆகியவற்றில் உள்ள ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தால் சமயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தகவல் :
கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி விரைவாக தரிசனம் செய்ய வைப்பதாக கூறி, அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இடைத்தரகர்கள் சிலர் உள்ளூர் மக்கள் என்ற போர்வையில் கோவிலுக்குள் அழைத்துச் செல்கின்றனர். அதை தடுக்கும் வகையில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வரும்போது தங்களுடைய ஆதார் அட்டை எடுத்து வந்தால், கிராம மக்கள் யார்? இடைத்தரகர்கள் யார்? என்று அடையாளம் தெரியும். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, இதுகுறித்து சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கலெக்டருடன் ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.