(Source: ECI/ABP News/ABP Majha)
வாழ தகுதியான முக்கிய நகரம் எது? - கருத்து கணிப்பில் எந்த நகரம் முதலிடம் பிடிக்கும்..!
வாழ தகுதியான முக்கிய நகரம் எது?, தமிழகத்தில் திருச்சிக்கு 4வது இடம், மத்திய அரசின் கருத்துக்கணிப்பில் தகவல்
இந்தியாவில் வாழ்வாதார நிலைமைகளின் அடிப்படையில் இந்தியாவின் முக்கிய நகரங்களின் வாழ தகுதியான ஊர் குறித்த பொதுமக்கள் வாக்கெடுப்பு மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஈஸ் ஆப் லிவிங் இன்டெக்ஸ் 2022ன் ஒரு பகுதியாக, குடிமக்களிடையே குடிமக்கள் கருத்துக் கணக்கெடுப்பை (சிபிஎஸ்) திருச்சி மாநகராட்சி ஊக்குவிக்கத் துவங்கியுள்ளது. டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ள ஆன்லைன் கணக்கெடுப்பில் இதுவரை 3000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, வாழ்க்கைத் தரம், பொருளாதார திறன் மற்றும் நகரத்தின் நிலைத்தன்மை ஆகிய மூன்று முக்கிய தூண்களில் கவனம் செலுத்தும். கணக்கெடுப்பில் மொத்தம் 17 கேள்விகள் கேட்கப்படும். மேலும் குடியிருப்பாளர்கள் தங்கள் நகரத்தைப் பற்றிய அவர்களின் பதில் 1 முதல் 5 வரை 1 கெட்டது மற்றும் 5 நல்லது என மதிப்பிடுமாறு கோரப்படும். முதல் கேள்விக்கும் மறு கேள்விக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல் இருக்கும் வகையில் கேட்கப்படும்.
மேலும் வாழ்க்கைத் தரம் பிரிவின் கீழ் சொந்த வீடு உள்ளதா, சாலை வசதி, குடிநீர் விநியோகம், கல்வி, பாதுகாப்பு, சுகாதார சேவைகள் மற்றும் தடையில்லா மின்சாரம் பற்றிய கேள்விகள், பொருளாதாரத் திறன் தூணில் வேலை வாய்ப்புகள், கட்டுப்படியாகும் விலை மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவை கேட்கப்படும். நிலைத்தன்மை தூணில், காற்று மாசு அளவு, தூய்மை மற்றும் பாதசாரிகளுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு குறித்த கேள்விகள் கேட்கப்படும். இதுகுறித்து திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இந்த கணக்கெடுப்பில் பங்கேற்பதற்கான ஆன்லைன் இணைப்பை குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் திருச்சி மாநகராட்சி பகிர்ந்துள்ளது. கணக்கெடுப்பில் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்ய உள்ளூர் மக்களை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக குடியிருப்பாளர்கள் www.eol2022.org/CitizenFeedback என்ற இணையதளத்தில் கருத்துக்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் பங்கேற்பதற்கு முன்பாக ஆன்லைனில் ஆதார் எண் உள்ளிட்ட பல்வேறு இணைப்புகளை அளித்தால் மட்டுமே கருத்துகளை பதிவிட முடியும். இந்த கருத்து கணிப்பில் பங்கேற்பாளர்களில் தமிழ்நாட்டில் திருப்பூர் பொதுமக்கள் 6 ஆயிரம் ஆன்லைனில் டவுன்லோடு முன்னிலையில் உள்ளனர். 2வது இடத்தில் கரூர், 3வது இடத்தில் சென்னை மற்றும் 4வது இடத்தில் திருச்சியில் 4 ஆயிரம் பேர் ஆன்லைனில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். மத்திய வீட்டுவசதி அமைச்சகத்தின் இந்த கருத்து கணிப்பில் கடந்த 2018ம் ஆண்டு திருச்சி 12வது மற்றும் 2020ம் ஆண்டில் 10வது இடத்தை பிடித்தது. தொடர்ந்து 2021ம் ஆண்டு இந்த கருத்து கணிப்பு நடத்தப்படாததை அடுத்து இந்தாண்டிற்கான கருத்துக்கணிப்பு துவங்கி வரும் 20ம் தேதியுடன் முடிவடைகிறது என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்