திருச்சி: உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஜபாளையம் யானை ரோகினி உயிரிழந்தது
திருச்சி அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஜபாளையம் யானை இறந்தது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் வசம் இருந்த யானைகள் மற்றும் சட்ட விரோதமாக வளர்த்து வந்த யானைகளை அரசு தனியாரிடம் இருந்து மீட்டு யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கும் பணியை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி எம்ஆர் பாளையத்தில் உள்ள வனப்பகுதியில் தமிழக வனத்துறை சார்பில் மீட்கப்பட்ட யானைகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வருகின்றனர். இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் மதுரையிலிருந்து வந்த மலாச்சி(38), காஞ்சி சங்கராச்சாரியார் மடத்திலிருந்து இந்து (25), திருநெல்வேலியிலிருந்து ஜமீலா(66), திருவிடைமருதூரிலிருந்து கோமதி(68) உள்ளிட்ட 6 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொள்ளாச்சி டாப்சிலிப்பிலிருந்து ரோகினி(25), ராஜாபாளையத்திலிருந்து இந்திரா (60) ஆகிய 2 பெண் யானைகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எம்ஆர் பாளையம் முகாமிற்கு வந்தது. தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த மறுவாழ்வு மையத்தில் வன மருத்துவர் மூலம் யானைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. மேலும் உடல்நல பாதிப்பு ஏற்படும்போது முறையான சிகிச்சைகள் வழங்கப்படும்.
மேலும் யானைகள் புத்துணர்ச்சிக்கு தண்ணீர் தொட்டிகளின் மூலம் குளிக்க வைப்பதோடு, தினமும் 1.5 கி.மீ. முதல் 6 கி.மீ. வரை நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் வந்த ரோகினி, இந்திரா யானைகள் சற்று உடல்நல குறைவு ஏற்பட்டு இருந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைபடி அவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தனித்தனி பாகன்கள் நியமிக்கப்பட்டு யானைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று யானைகள் மறுவாழ்வு மைய நிர்வாகம் தெரிவித்தது. 8 யானைகளும் முகாமில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், யானை ரோகினி கடந்த 6 மாதங்களாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தது. உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அந்த யானை சிகிச்சை பலன் இன்றி இறந்தது. கால்நடை மருத்துவ குழுவினர், வன அலுவலர்கள் முன்னிலையில் யானையை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மறுவாழ்வு மையத்திலேயே 12 அடி அகலம், 12 அடி நீளம், 12 அடி ஆழம் கொண்ட குழி வெட்டப்பட்டு உப்பு, சுண்ணாம்பு, மஞ்சள் பொடி, பூக்கள் யானையின் மீது தூவப்பட்டு கிரேன் மூலம் தூக்கி குழிக்குள் இறக்கி அடக்கம் செய்யப்பட்டது. இந்த மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு யானை இறந்ததால் தற்போது, 7 யானைகள் மட்டுமே உள்ளன. உயிரிழந்த யானை ரோகினிக்கு வயது 26. இந்த யானை கடந்த 6 மாதத்திற்கு முன்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியாரால் அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி இங்கு கொண்டு வந்து பராமரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்