திருச்சி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.! விமான நிலையம் போல பஞ்சப்பூர் பேருந்து நிலையம்.! எப்போது வரும்?
Trichy Panchapur New Bus Stand: திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையமானது, சுமார் ரூ. 400 கோடி செலவில் பல்வேறு கட்டமைப்புகளுடனும் மற்றும் பல்வேறு வசதிகளுடனும் தயாராகி வருகிறது.

தமிழ்நாட்டில் மத்தியில் இருக்கும் மாவட்டமாக திருச்சி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால், பலர் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், திருச்சி வந்து மாறிச் செல்வர். இதனால் இங்கிருந்து பலர் , வெளி மாவட்டங்களுக்கும் , வெளி மாவட்டங்களிலிருந்து பலர் திருச்சிக்கு வருவது வழக்கம். இதனால், திருச்சி மாநகராட்சிக்கு மக்கள் அதிக வருகை புரியும் இடமாக இருக்கிறது. இதனால் திருச்சியில் மக்கள் கூட்டம் நெருங்கி வழியும்.
3வது பேருந்து நிலையம்:
ஏற்கனவே, திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய முக்கிய 2 பேருந்து நிலையங்கள் உள்ளன. என்னினும் கூட்டம் நெரிசல் காரணமாக , பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில்தான், 3வதாக திருச்சி பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையமானது, சுமார் 400 கோடி செலவில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகள் அமைப்பதில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த ஆண்டே திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சில பணிகள் மட்டுமே இருப்பதாகவும் , சில நாட்களில் திறக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: இந்தியர்களின் கை கால்களில் விலங்கு மாட்டப்பட்டதா? அமெரிக்காவிலிருந்து எப்படி அனுப்பப்பட்டனர்?
வசதிகள்
இந்த பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையமானது, சுமார் 1500 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. சில இடங்களில் குளிரூட்டப்பட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் 50, 000 பயணிகள் வரை வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய பேருந்து நிலையத்தில், மக்கள் காத்திருப்பு அறை, குளியல் அறை , தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மாற்றுத் திறனாளிகளுக்கான தனி அறை மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கான தனி வழித்தடங்கள் என வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மேற்கூரைகள் விமான நிலையத்தில் இருப்பது போல அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் திறக்கப்படும்
இப்புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா , கலைஞர் உள்ளிட்டவர்களின் சிலை திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், கடைசி கட்டமாக டைல்ஸ் ஒட்டும் பணிகள் சில இடங்களில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அனைத்து இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்ததும் , தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இப்புதிய பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் , திருச்சி மாநகரில் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் குறையம் என்றும், இதனால், பொதுமக்கள் சிரமமின்றி விரைவான பயணத்தை மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், விரைவில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





















