இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர் அதிரடியாக கைது - போலீஸார் நடவடிக்கை
திருச்சி மாவட்டத்தில் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - போலீஸார் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசுவது, நடனம் ஆடுவது போன்ற செயல்களில் பலர் ஈடுபட்டனர். அதன் விளைவாக பல்வேறு குற்றச்சம்பவங்களும் அரங்கேறியது.
இதன் விளைவாக டிக் டாக் போன்ற சமூக வலைதளத்தை அரசாங்கம் தடை செய்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் திரைப்படப் பாடலுக்கு நடனம் ஆடுவது மற்றொரு உடன் இணைந்து நடனம் ஆடுவது போன்று சில பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் இந்த செயல்கள் அனைத்திற்கும் வரைமுறை என்பது கட்டாயமாக இருக்க வேண்டும். வரைமுறையை மீறும் போது சில தவறுகள் ஏற்படலாம், ஆகையால் சமூக வலைதளங்களை கையாளும்போது பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என காவல்துறை தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சமூகவலைதளத்தில் தவறான செயல்களில் பலர் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. சமூக வலைதளங்களில் மது அருந்துவது போன்று வீடியோ வெளியிடுவது, பெண்களுடன் தவறாக நடந்து கொள்வது போன்ற காட்சிகள் பதிவிடுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர ஆயுதங்களுடன் வசனங்கள் பேசி காட்சியை பதிவிடுவது, அரசு விதிமுறைகளை மீறி பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக வாகனங்களில் சாகசம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் எச்சரிக்கை
இந்நிலையில் திருச்சி மாவட்டம், புலிவலம் காவல் நிலைய எல்லை, புலிவலம் அருகே, துறையூர் திருச்சி சாலையில், கடந்த 23.05.24 அன்று நிவாஷ் என்ற இளைஞர், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் படுத்துக்கொண்டு சாகசம் செய்து, அலட்சியமாக ஓட்டிச் சென்றார். இந்த வீடியோ கட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இதுகுறித்து புலிவலம் காவல் நிலைய 5. 68/24, U/s 278, 279, 286, 336, 308, 114 IPC r/w 184, 188 MV - LQ அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று 09.06.24 காலை, மேற்படி குற்றவாளியை கைது செய்து அவர் சாகசத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இனிவரும் காலங்களில் இது போன்ற சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் விபரங்கள் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் தெரியப்படுத்துமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.