![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தேர்தலில் பிரதமர் மோடி வேட்பாளராக நிற்கும் தொகுதியில் நிர்வாண போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே அரை நிர்வாணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
![தேர்தலில் பிரதமர் மோடி வேட்பாளராக நிற்கும் தொகுதியில் நிர்வாண போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு Trichy news Farmers have decided to hold a naked protest in the constituency where Modi is standing as a candidate in the election - TNN தேர்தலில் பிரதமர் மோடி வேட்பாளராக நிற்கும் தொகுதியில் நிர்வாண போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/13/437c5d565d523ef87214d841417e67ab1707806659079184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருச்சி மாநகர், கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிர்வாணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் இப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு பேசியதாவது:
இந்தியா ஒரு ஜனநாயக நாடு, சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் எல்லோரும் சுதந்திரமாக வாழும் இந்தியாவில் விவசாயிகளை மட்டும் அடிமைகளாக நடத்துவது நியாயமா?, மத்தியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை கொடுக்கவில்லை என்று, விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்தோம். பிரதமர் மோடி 2 மடங்கு லாபகரமான விலையை விவசாய விளை பொருளுக்கு தருவதாக 2014 ஆம் ஆண்டும், 2019 ஆம் ஆண்டும் தேர்தல் நேரத்தில் கூறினார். ஆனால் இதுவரை எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக 1 கிலோ நெல்-க்கு ரூ 54 தருவதாகவும், கரும்பு 1 டன்-க்கு ரூ 8100 தருவதாகவும் கூறிவிட்டு விவசாயிகளை ஏமாற்றி விட்டார். தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளை புறக்கணித்து வருகிறது. அண்மையில் ராமர் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தது மகிழ்ச்சி தான், ஆனால் இந்நாட்டில் இருக்கக்கூடிய இந்து விவசாயிகளை வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார். ஆகையால் 90 கோடி விவசாயிகளை அழிக்காமல் காப்பாற்றுங்கள், இல்லையென்றால் விவசாயிகளுக்கு விஷத்தை கொடுத்து கொன்று விடுங்கள் என்றார்.
விவசாயிகளுக்கு லாபகரமான விலையை கொடுக்காததால் சட்டை, வேஷ்டியை பிடுங்கிக் கொண்டு கோவணத்தை கொடுத்து விட்டது. ஆகையால் இன்று கோவணம் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டோம், விவசாயிகள் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை இன்னும் நீடிக்கிறது. ஆகையால் விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபகரமான விலையை விவசாய விளை பொருள்களுக்கு கொடுக்கவில்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலில் 111 விவசாயிகள், மோடி அவர்கள் போட்டியிடும் தொகுதியில் நிர்வாணமாக, அவரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தல், பிரச்சாரம் செய்வது போன்ற செயல்களில் நிச்சயம் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துகிறோம். ஆனால் மாநில அரசும் ,காவல் துறையும் எங்களது போராட்டங்களை தடுப்பது நியாயமா என கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறைக்கும் ,விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)