திருச்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதில் ஊழல், அரசு அதிகாரிகள் உடந்தையா? - உயிர் பயத்தில் மக்கள்
திருச்சி மாநகர், அரசு மருத்துவமனை அருகே உள்ள வண்ணாரபேட்டை பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகள் இல்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு.
திருச்சி மாநகர், அரசு மருத்துவமனை அருகே உள்ள வண்ணாரபேட்டை பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், நகர்புற வளர்ச்சி துறை, மற்றும் குடிசைமாற்றுவாரியம் சார்பாக 384 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டபட்டது. மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த பணிகள் முடிவுற்று, கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எடப்பாடி.பழனிசாமி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அப்படியே கிடப்பில் போடபட்டது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பை திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. மேலும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்ததும் சில மாதங்களில் கட்டிடங்களில் விரிசல் விடுவதற்கான நீர் கசிவு ஏற்பட்டுவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு அரசு அதிகாரிகளை சந்தித்து குடியிருப்பு வாசிகள் பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது, தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுகாக கட்டிதரப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டிற்கு ரூ.2.50 லட்சம் பணம் கொடுத்து நாங்கள் வாங்கினோம். ஆனால் எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் எங்களை ஏமாற்றியுள்ளனர். தொடர்ந்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றனர். குறிப்பாக கட்டிடம் தரம் இல்லை, 384 அடுக்குமாடி வீடுகள் என்று அதிகாரிகள் சொன்னார்கள், ஆனால் 378 வீடுகள் மட்டுமே உள்ளது.
மேலும் தண்ணீர் வசதிகள் , மின்சார வசதி, கழிவறை வசதி என எந்தவிதமான வசதிகளும் முறையாக செய்து தரவில்லை. ஆனால் இந்த அடுக்குமாடி குடியிருப்பு 6 பிளாக் உள்ளது. இங்கு 4 குடிநீர் அடிகுழாய், மோட்டார்கள் இருந்தாலும் எதும் செயல்படவில்லை. ஒரே ஒரு அடிபம்பு குழாய் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதில் தான் அனைவரும் நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீர் எடுத்தும் செல்லும் அவநிலை உள்ளது. அதேபோல ஜென்செட் இருந்தும் பேட்டரி இல்லாமல் பயன்படாற்று உள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாமல் இருப்பதால் மது குடிக்கும் நபர்கள் தினமும் அட்டுழியம் செய்து வருகிறார்கள். இதனால் பெண்கள், குழந்தைகள் மிகவும் அச்சமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் இந்த பகுதியை சுற்றியும் குப்பைகள், கழிவுநீர் தேக்கம், சாக்கடை என அனைத்தையும் மாநகராட்சி சுத்தம் செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். இதனால் பல விதமான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், சிலர் இறந்து விட்டனர். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிகையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் சார்பாக தேர்தல் நடத்தப்பட்டு தலைவர் விஜயகுமார், செயலாளர் ஜான்ப்ரிடோ ஆகியோர் தேர்வு செய்தோம். இவர்கள் மூலம் அனைத்து அடிப்படை வசதிகளையும் நாங்களே செய்து கொள்ள முடிவு செய்தோம், ஆகையால் ஒரு குடும்பத்திற்கு மாதம் 750 ரூபாய் வசூல் செய்து அதை வங்கி கணக்கில் செலுத்தி தேவைபடும் பொழுது தேவையான வசதிகளை செய்துகொள்ள எடுத்துகொள்ளலாம் என முடிவு செய்தோம். ஆனால் கடந்த சில வருடமாக இவர்கள் எங்களிடம் வாங்கிய பணத்தை பற்றி எந்த தகவலும் இல்லை, கேட்டாலும் சரியான பதில் கூறாமல் தட்டி செல்கின்றனர். இதனால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். கடந்த ஆண்டு பெய்த மழைக்கே கட்டிடங்களில் பல இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டு சுவர் சிதலமடைந்துள்ளது. எப்போது சுவர் இடிந்து விழும் என தினமும் மரண அச்சத்தில் இங்கு வாழ்ந்து வருகிறோம்.
குறிப்பாக ஏழை எளிய மக்களை பார்த்தால் மாநில அரசுக்கும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு ஒரு பொருட்டாகவே எடுத்துகொள்வதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் வீடு வீடாக வந்து ஓட்டு கேட்டார்கள், வெற்றி பெற்ற பிறகு எங்களை திரும்பி கூட யாரும் பார்க்கவில்லை என குற்றம்சாட்டினர். தமிழ்நாட்டில் திராவிடமாடல் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். நாங்களும் தமிழ்நாடில் தான் இருக்கிறோம், எங்கள் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இங்கு உள்ளது. மேலும் தரமற்ற முறையில் கட்டிடம் கட்டியவர்கள் மீதும், அலட்சியமாக செயல்படும் மாவட்ட அரசு அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.