கையும் களவுமாக சிக்கிய பில் கலெக்டர்: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி
காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.12,000ம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். சீனிவாசன் மறுப்பு தெரிவிக்க, சிறிது நேரத்திற்கு பின்னர் ரூ.10,000ம் ஆக லஞ்ச தொகையைக் குறைத்துக் கேட்டுள்ளார்.

திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய லஞ்சம் கேட்ட பில் கலெக்டரை வலுவாக ஆதாரத்தோடு லஞ்ச போலீசார் கைது செய்த சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.
திருச்சி, கே.கே.நகரில் உள்ள இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் உள்ள திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5920 சதுரடி உள்ள காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி விண்ணப்பித்தார்.
காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய Zone-IV பொன்மலை கோட்டம் , திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வார்டு 65-க்குரிய பில் கலெக்டர் செபாஸ்தியான் என்பவரை அணுகினார் சீனிவாசன். அப்போது அவரிடம் பில் கலெக்டர் செபஸ்தியான் காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.12,000ம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு சீனிவாசன் மறுப்பு தெரிவிக்க, சிறிது நேரத்திற்கு பின்னர் ரூ.10,000ம் ஆக லஞ்ச தொகையைக் குறைத்துக் கேட்டுள்ளார் பில் கலெக்டர் செபஸ்தியான்.
ஆனால், அவருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் இதுகுறித்து புகார் தெரிவிக்க அவர்கள் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர் கொடுத்த ஆலோசனையின் பேரில், பில் கலெக்டர் செபஸ்தியானிடம் ரசாயனம் தடவிய லஞ்சப்பணம் ரூ.10,000-த்தை கொடுக்க சொல்லி உள்ளனர்.
இதன்படி சீனிவாசன் அந்த பணத்தை பில் கலெக்டர் செபஸ்தியானிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செபஸ்தியானை கையும் களவுமாகப் பிடிபட்டார். அதோடு, செபஸ்தியானைக் கைது செய்து சோதனை செய்தபோது அவரிடம் கணக்கில் வராத மேற்கொண்டு ரூ.24,000 இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், சந்தேகத்தின் பேரில் அத்தொகை கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக, திருச்சி பொன்மலை கோட்ட கார்ப்பரேசன் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பில் கலெக்டர் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கையில், இது ஒன்று தெரிந்துள்ளது. இதேபோல் தினமும் எத்தனையோ உள்ளது. இதையும் லஞ்சம் கொடுக்காமல், லஞ்சம் கேட்பவர்கள் குறித்து போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம் என்றனர்.






















