Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு அக்கட்சியின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் இன்று மிகப்பெரிய திருப்பமாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். விஜய்யின் கட்சியில் அவர் இணைந்த நிலையில், அவருக்கான பொறுப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
தவெக-வில் செங்கோட்டையன்:
இந்த நிலையில், செங்கோட்டையனுக்கு கட்சியில் என்ன பதவி? என்பது குறித்து தவெக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர், தாம் சார்ந்திருக்கும் கழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி நன்மதிப்பை பெற்றவர். மூத்த அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
செங்கோட்டையனுக்கு என்ன பதவி?
செங்கோட்டையன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார்.
மேலும், கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும், பொதுச்செயலாளருடனும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை மேற்கண்ட மாவட்டங்களில் மேற்கொள்வார்.
வரவேற்பு:
அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சத்தியபாமா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் வெங்கடாச்சலம், முத்துக்கிருஷ்ணன் மற்றும் பிற புதிய உறுப்பினர்களையும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கழகத் தோழர்களும் நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெருமகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக செங்கோட்டையன் இருப்பார் என்று அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
செங்கோட்டையனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் எம்பி சத்தியபாமா, முன்னாள் எம்எல்ஏ வெங்கடாச்சலம் ஆகியோருக்கு என்ன பொறுப்புகள்? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
சுமார் 40 வருடங்களுக்கும் மேல் அதிமுக-வில் முக்கிய தலைவராக அங்கம் வகித்தவர் செங்கோட்டையன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களுக்கும் பக்கபலமாக இருந்தவர் எடப்பாடி ஆட்சியிலும் அமைச்சராக பதவி வகித்தவர். அதிமுக ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய்க்கு பக்கபலமாக தவெக-வில் இணைந்துள்ளார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு ஒரு மாத காலம் முடங்கியிருந்த தவெக, கடந்த சில நாட்களாகத்தான் மெல்ல மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், அனுபவ அரசியல்வாதியான செங்கோட்டையன் தவெக-வில் இணைந்திருப்பது சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு பக்கபலமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.






















