திருச்சி மாவட்டத்தில் 4 அறிவுசார் மைய பசுமைக் கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
திருச்சி மாவட்டத்தில் ரூ.8.93 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நூலகத்துடன் கூடிய 4 அறிவுசார் மைய பசுமைக் கட்டிடங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திருச்சி மாவட்டத்தில் ரூ.8.93 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நூலகத்துடன் கூடிய 4 அறிவுசார் மைய பசுமைக் கட்டிடங்களையும். நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு உறைவிட கட்டடம், நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையக்கட்டடம் ஆகியவற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். திருச்சி மாநகர் குதுப்பாபள்ளத்தில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன் மற்றும் மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்ததாவது..
திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடையே வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையிலும், பல்வேறு போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அமைதியான சூழலில் எவ்வித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கும், அதன் மூலம் சிறப்பான எதிர்காலத்தை இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட குதுப்பாபள்ளம் பகுதியில் ரூ.2.57 கோடி மதிப்பீட்டிலும், பாலக்கரையில் ரூ.2.57 கோடி மதிப்பீட்டிலும், துறையூர் நகராட்சியில் ரூ.1.07 கோடி மதிப்பீட்டிலும், மணப்பாறை நகராட்சியில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டிலும், என மொத்தம் ரூபாய் 7.43 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் நுட்பத்தில் நூலகத்துடன் கூடிய 4 அறிவுசார் மைய பசுமைக் கட்டடத்தை திறந்து வைத்தார்கள்.
மேலும், துறையூர் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை கிடைத்திடும் வகையில் குட்டக்கரையில் ரூபாய் 75 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும், துறையூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்கும் வகையில் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு உறைவிட கட்டடத்தையும், மணப்பாறை நகராட்சி வெள்ளக்கல் பகுதியில் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையக்கட்டடத்தையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்கள். திருச்சி மாவட்டத்திற்கு ரூ.8.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 கட்டடங்களை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு திருச்சி மாவட்ட பொதுமக்களின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார். மேலும், திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களுடைய அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கும், உயர்கல்வியில் படிப்பதற்கான குறிப்புகள் எடுப்பதற்கும் இந்த அறிவு சார்மையத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். குறிப்பாக மாநில, மத்திய அரசு சம்பந்தப்பட்ட தேர்வுகளை எதிர்கொள்வதற்கு இந்த மையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், நகர பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.