ரயிலில் கைப் பையில் கொண்டு வந்த ₹ 2.04 கோடி மதிப்பிலான தங்க நகை, பணம் - திருச்சி ரயில் நிலையத்தில் சிக்கிய பயணி
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரிடம் ரூ.2 கோடியே 4 லட்சம் மதிப்புடைய நகை, பணம் பறிமுதல் - ரயில்வே போலீசார் நடவடிக்கை.

சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்ட மங்களூர் விரைவு ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்கு காலை வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை வழக்கம்போல் பயண சீட்டு பரிசோதகர்கள் சோதனை செய்தனர். அதேபோல் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கான நுழைவாயில்களில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேனர்கள் மூலமாகவும் பயணிகள் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள்.
அதன் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு ஆண் பயணியை சோதனை செய்ததில் அவர் கொண்டு வந்திருந்த கைப்பையில் மர்ம பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அவருடைய உடமைகளை சோதனை செய்ததில் அதில் தங்க நகைகளும், கட்டுக்கட்டாக பணமும் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்ததோடு அந்த மர்ம நபரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
திருச்சியில் ரூபாய் 2.04 கோடி நகை - பணம் பறிமுதல்
மேலும், அந்த விசாரணையில் அவரது பெயர் லட்சுமணன், ராமநாதபுரம் மாவட்டம், காட்டுபரமகுடியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், அவர் மதுரையில் உள்ள ஒரு நகை கடையில் வேலை பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கொண்டு வந்த நகைகளுக்கான உரிய ரசீதுகள் எதுவும் இல்லாததால் வணிகவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வணிகவரித்துறை அதிகாரிகள் வந்து அவற்றை சோதனையிட்டதில் மொத்தம் 2.795 கிலோ கிராம் எடையுள்ள தங்க நகைகள் இருப்பதும், 15 லட்சம் ரூபாய் ரொக்கமாக பணம் இருப்பதும் கண்டறியப்பட்டது.
தற்போது கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 89 லட்சம் ரூபாய் ஆகும். இதையடுத்து லட்சுமணனிடம் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

