Farmers: விவசாயிகள் பல இன்னல்களை சந்தித்து விவசாயத்தை காப்பாற்றி வருகிறார்கள் - திருச்சி ஆட்சியர்
விவசாயிகளை தொழில்முனைவோர் ஆக்கிட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கருத்தரங்கம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் திட்டத்தின்கீழ் வணிகத்துறையின் மூலம் தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் மண்டல அளவிலான வர்த்தக தொடர்பு பணிமனை கருத்தரங்கம் இன்றும் (நேற்று), நாளையும் என இரு தினங்களில் கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மேடையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேசுகையில், “நம் நாட்டின் முதுகெலும்பாக செயல்படக்கூடியது விவசாயம் மட்டும் தான். பருவநிலை மாற்றம் ஏற்பட்டாலும், இக்கட்டான சூழ்நிலையில் பெரும்பாடுபட்டு விவசாயத்தை தற்போது இருக்கக்கூடிய விவசாயிகள் பேணிக் காத்து வருகிறார்கள். மேலும், வரும் தலைமுறையினர் அனைவருக்கும் விவசாயத்தைப் பற்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துரைக்க வேண்டும். சூழ்நிலை மாற்றங்களால் விவசாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் மேலை நாடுகளில் விவசாயத்தை பெரிய அளவில் பெருக்கி வருகிறார்கள். நம் நாட்டில் விவசாயத்தை மென்மேலும் பெருக்க வேண்டும். விவசாயிகள் வாழ்வில் நலம் பெற வேண்டும், என்றால். வரும் தலைமுறையினருக்கு விவசாயத்தை பற்றி தெளிவாக எடுத்துரைத்து, கற்றுக் கொடுத்து விவசாயத்தை காப்பாற்ற நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் 2019-20ம் ஆண்டு முதல் திருச்சி மாவட்டத்தில் 4 உபவடிநிலப்பகுதிகளில் உலக வங்கி நிதியின் கீழ் ரூ.7.12 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர், குழுக்களை உருவாக்கி அவற்றை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக ஒருங்கிணைத்து கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது. இரண்டு மடங்கு மகசூல் மூன்று மடங்கு வருமானம் என்ற அரசின் செயல் திட்டம் இந்த பணிமனையின் மூலம் விவசாயிகள் பெறுவதற்கு அனைத்து தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுகிறது” என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்.முருகேசன்,வேளாண்மை இணை இயக்குநர், கு.சரவணன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), எஸ்தர்சீலா, மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை மீனாகுமாரி, வேளாண்மை துணை இயக்குநர், IAMWARM, விமலா, தோட்டக்கலை துணை இயக்குநர், எஸ்.குமாரகணேஷ், செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் தொழில் நுட்ப கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
மேலும் திருச்சி விற்பனைக்குழு செயலாளர், சுரேஷ்பாபு நபார்டு வங்கி DDM மோகள், மற்றும் டாக்டர்.ஆர்.ரமேஷ்பாபு, மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். இந்த பணிமனை மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை திறம்பட வழிநடத்த விவசாயிகளுக்கு உரியவிழிப்புணர்வு , தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு, சந்தை ஒருங்கிணைப்பு செய்யும் பொருட்டு (Market Linkage) வல்லுநர்கள் மற்றும் உரிய நிறுவனங்கள் விவசாயிகளிடம் நேரடியாக கலந்துரையாடி உரிய ஒப்பந்தங்கள் போட ஆவண செய்யப்பட்டுள்ளது. சிறுகுறு விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், இடைத்தரகர்கள் செயல்பாட்டை முற்றிலுமாக குறைத்திடவும் வழிவகை செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டங்களை சார்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பங்குபெற்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்