திருச்சியில் காங்கிரஸ் கட்சியினருக்குள் மோதல் : ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு..
திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்டனர். அப்போது, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் யங் இந்தியன் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறையினர் `சீல்' வைத்தனர். இதையடுத்து இந்தியா முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நேற்று காலை திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கவுன்சிலர் ரெக்ஸ், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.ஆர். மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்துக்கு நிர்வாகிகள் வந்தனர். கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜவகர் அமர்ந்து இருந்தார்.
இந்நிலையில் மாவட்ட தலைவர் ஜவகர் நிருபர்களுக்கு பேட்டி கொடுக்க இருந்த நிலையில் யார் முன்பகுதியில் நிற்பது என்பது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வக்கீல் சரவணன் மற்றும் நிர்வாகிகள் இடையே வாக்குவாதமாகி மோதல் ஏற்பட்டது. அப்போது, இருதரப்பினர் இடையே கைகலப்பாகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அலுவலகத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அலுவலகத்திற்கு கீழே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் அங்கிருந்து வெளியேற்றி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் காங்கிரஸ் கட்சி அலுவலகம் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மாநகராட்சி தேர்தல் சமயத்தில் சீட் ஒதுக்கீட்டின் போது, ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக தலைவரை கண்டித்து, ஏற்கனவே கட்சி அலுவலகத்தை பூட்டி காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அதன்பின் கக்கன் படம் வைப்பது தொடர்பாக அவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதால் கோஷ்டிமோதல் பூதாகரமாக மாறியது வெட்டவெளிச்சமாக தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் அதிக அளவில் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். மேலும் அப்பகுதியில் ஒரு மணி நேரமாக பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்