திருநங்கைக்கு காவலர் பாலியல் தொந்தரவு - திருச்சி மத்திய சிறையில் அதிர்ச்சி
திருச்சி மத்திய சிறையில் திருநங்கைக்கு காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
மத்திய சிறையில் திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு
திருச்சி மத்திய சிறையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் புகார் சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருச்சி மத்திய சிறையில் 2,517 பேரை அடைக்கும் வசதி உள்ளது. தற்போது இங்கு 836 தண்டனை கைதிகள் உள்பட சுமார் 1,600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் திருச்சியை சேர்ந்த 32 வயது திருநங்கை ஒருவரும் அடைக்கப்பட்டுள்ளார். திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த திருநங்கை கைது செய்யப்பட்டு இருந்தார். திருச்சி மத்திய சிறையில் சி.பி.-1 என்ற தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் சென்னையில் இருந்து மாரீஸ்வரன் என்ற சிறைக்காவலர் மாற்றாலாகி வந்தார். அவர் தனி அறையில் இருந்த திருநங்கைக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட திருநங்கை, திருச்சி மத்திய சிறை சூப்பிரண்டு ஆண்டாள், சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆகியோரிடம் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் சிறைக்காவலர் மாரீஸ்வரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், புகாரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டதாக கூறப்படுகிறது.
திருச்சி மத்திய சிறை துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்
இதனால் மனமுடைந்த திருநங்கை திருச்சி மாவட்ட கோர்ட்டுக்கு ஆஜராக வந்த நேரத்தில், கோர்ட்டு வளாகத்தில் உள்ள இலவச சட்டப்பணிகள் ஆணையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து சுப்புராமன் என்ற வக்கீல் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு திருச்சி மத்திய சிறைக்கு சென்று விசாரணை நடத்தியது.
இதனை தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது திருநங்கையின் புகார் உண்மை என்று தெரியவந்தது.
இதையடுத்து திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, திருச்சி மத்திய சிறை சூப்பிரண்டு ஆண்டாள், சிறைக்காவலர் மாரீஸ்வரன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்வர்தயாள் கடந்த 11-ந்தேதி உத்தரவிட்டார். அத்துடன் துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், டி.ஐ.ஜி. ஜெயபாரதி வேலூர் சிறைக்காவல் பயிற்சி பள்ளி டி.ஐ.ஜி.யாகவும், சூப்பிரண்டு ஆண்டாள், திருச்சி சிறைக்காவலர் பயிற்சி பள்ளி சூப்பிரண்டாகவும் கடந்த இரு நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறையில் திருநங்கைக்கு காவலரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும், அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் அல்லது ஆண் குற்றவாளிகளுக்கு சிறை குறை சார்ந்த அதிகாரிகள் ரொம்ப அனுப்ப வேண்டும். ஆனால் சிறைத்துறை அதிகாரியே தவறான செயலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சம்பவம் மீண்டும் எந்த சிறை வளாகத்திலும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.