பெரியார் போட்டோவா வச்சுருக்க.. கடைக்காரர் மண்டையை உடைத்த பாஜக நிர்வாகி - திருச்சியில் இப்படியா?
திருச்சியில் கடையில் பெரியார் புகைப்படம் இருந்ததால் சாப்பிட மறுத்த பா.ஜ.க. நிர்வாகி கடை உரிமையாளர் தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளார்.

திருச்சி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே சிறிய உணவகம் நடத்தி வருபவர் செல்வகுமார். 61 வயதான இவர் காஜாபேட்டையைச் சேர்ந்தவர். திராவிட கொள்கைகள் மற்றும் பெரியார் மீது பற்றுகொண்ட இவர் தனது கடையில் பெரியாரின் புகைப்படத்தை வைத்துள்ளார்.
பெரியார் புகைப்படத்தால் சர்ச்சை:
திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு 58 வயதாகிறது. இவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். இவர் சேகரின் கடைக்கு நேற்று சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது, அங்கு பெரியாரின் புகைப்படம் இருப்பதை பார்த்துள்ளார். அப்போது, பெரியார் குறித்து செல்வகுமாரிடம் விமர்சித்து பேசியுள்ளார். அதற்கு செல்வகுமாரும் கருத்து கூற சற்று வாக்குவாதம் ஆகியுள்ளது.
மேலும், சேகர் பெரியார் புகைப்படம் இருப்பதால் தான் சாப்பிட மாட்டேன் என்றும் மறுப்புதெரிவித்துள்ளார். இதனால், செல்வகுமார் சாப்பிட விருப்பம் இல்லாவிட்டால் தனது கடையை விட்டு வெளியே செல்லுமாறு தெரிவித்துள்ளார். அப்போது, இவர்களுக்குள் மேலும் வாக்குவாதம் உண்டாகியுள்ளது.
மண்டையை உடைத்த பா.ஜ.க. நிர்வாகி:
அப்போது, ஆத்திரம் அடைந்த சேகர் அருகில் இருந்த இரும்பால் செல்வகுமாரின் தலையில் தாக்கியுள்ளார். இதில் செல்வக்குமாரின் தலையில் அடிபட்டு அவருக்கு ரத்தம் வழிந்தோடியது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் செல்வக்குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக செல்வகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பாலக்கரை போலீசார் சேகரை கைது செய்தனர். சேகர் மீது 296 பி , 118-1 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பரபரப்பு:
திருச்சியில் மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த பகுதியில் பெரியாரின் புகைப்படத்தை கடையில் வைத்திருந்ததற்காக, பா.ஜ.க. நபர் கடைக்காரரின் மண்டையை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான பா.ஜ.க. நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியார் ஆதரவாளர்கள், திராவிட கொள்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பெரியாரையும், பெரியாரின் கொள்கையும் பா.ஜ.க. மற்றும் இந்துத்துவா அமைப்பினர் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிலர் கொள்கை ரீதியாக அல்லாமல் இதுபோன்று தாக்குதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் திமுக- பா.ஜ.க. மோதல் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. அதேசமயம் தமிழகத்தில் பா.ஜ.க. அதிமுக-வுடன் கூட்டணியில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





















