(Source: ECI/ABP News/ABP Majha)
முதலமைச்சரிடம் பணிநியமன ஆணை பெற்ற அர்ச்சகர் - உயிருக்கு அச்சம் இருப்பதாக மனைவியுடன் காவல் நிலையத்தில் புகார்
’’கோயில் காவலர் வரதன், அர்ச்சகரான என்னை எனது சாதியை குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார்’’
தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்டவரை, கோவில் காவலர் சாதிப் பெயரைச் சொல்லி திட்டி மிரட்டுவதாக திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவர் பட்டியல் இனத்தை சார்ந்தவர். இந்நிலையில் திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோவிலான முக்தீஸ்வரர் கோயிலில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நேரில் பணி ஆணை பெற்ற கோயில் அர்ச்சகர் மகேஷ்குமாரை சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பணிபுரியும் காவலர் வரதன் மதுபோதையில், அர்ச்சகரின் சாதி பெயரைக் கூறி திட்டியும், வேலையினைவிட்டு விலகுமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இப்பிரச்சனை தொடர்பாக சமயபுரம் காவல் நிலையத்தில் அர்ச்சகர் மகேஸ்குமார் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் ‘தாராபுரம் பகுதியைச் சேர்ந்த நான், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கைகளால் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோவிலான முக்தீஸ்வரர் கோயில் அர்ச்சகர் பணி ஆணை பெற்று அக்கோயிலில் பணிபுரிந்து வருகிறேன். அதன் காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோயில் குடியிருப்பு வளாகத்தில் வசித்துவருகிறோம்.
இந்நிலையில் அதே குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் கோயில் காவலர் வரதன், அர்ச்சகரான என்னை எனது சாதியை குறிப்பிட்டும், அர்ச்சகர் பணியில் நீடிக்கக் கூடாது எனவும், அருகிலுள்ள வீட்டாரிடம் நீ பேசக் கூடாது எனவும் தொடர்ந்து என்னை அடையாளம் தெரியாத சிலரோடு சேர்ந்து மதுபோதையில் மிரட்டிவருவது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 22ஆம் தேதி சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணியிடமும், காவல்துறையினரிடமும் புகார் அளித்தேன். புகார் தொடர்பாக இந்நாள்வரை எவ்வித விசாரணையும் இல்லை. இந்நிலையில், 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு நானும் எனது மனைவியும் வீட்டில் அமர்ந்து உணவு உட்கொள்ளும்போது மதுபோதையில் எனது வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்து என்னையும் எனது மனைவியையும் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியும், அர்ச்சகர் வேலையைவிட்டு விலகிவிட வேண்டும் எனவும், என் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் எனவும் கோயில் காவலர் வரதன் என்னை மிரட்டித் தாக்க முற்பட்டார். எனவே விசாரணை செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எனக்கும், என் மனைவிக்கும் தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து சாதினரும் அர்ச்சகராக ஆகலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் நான் பணிக்கு வந்த நாள் முதல் இக்கோயிலில் பணிபுரியும் சிலர் என்னை பூஜை செய்யவிடாமலும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க விடாமலும், என் சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி கொச்சைவார்த்தைகளால் என்னை திட்டி வெளியே அனுப்புவார்கள். இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் பல முறை புகார்கள் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என வேதனையுடன் அர்ச்சகர் மகேஷ்குமார் தெரிவித்தார். மேலும் என் சாதி பெயரை பயன்படுத்தி நீ இனிமேல் பணிக்கு வரக்கூடாது எனவும், ஊரைவிட்டு ஓடிவிடு இல்லை என்றால் என்னையும், என் மனைவியையும் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினார்கள். உயிர்க்கு பயந்து மீண்டும் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தோம் என்றார். இதனை தொடர்ந்து கோயில் நிர்வாக அதிகாரிகள் இன்று என்னை அழைத்து விசாரனை நடத்தினர். கடந்த சில நாடகளாக என்ன நடந்தது என்று அனைத்தையும் கூறிய பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.