Trichy Panjappur IBT: 40 ஏக்கர், ஃபுல்லா ஏசி, 12 லிஃப்ட், 401 பேருந்துகள்- டபுள் டக்கர் பஞ்சப்பூர் பேருந்து முனையம் ரெடி
Trichy Panjappur IBT: திருச்சி பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை வரும் மே 9ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

Trichy Panjappur IBT: திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் 40 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம்:
திருச்சி மத்திய பேருந்து நிலையம் 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மத்திய பகுதியின் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ள இந்த பேருந்து நிலையத்திலிருந்து, நாளொன்றிற்கு 2 ஆயிரத்து 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வடக்கு எல்லையான சென்னைக்கு மட்டுமின்றி, தெற்கு எல்லையான கன்னியாகுமரி வரையிலும் பேருந்துகளை இயக்குகிறது. ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா என மூன்று அண்டை மாநிலங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உள்ளூர் இணைப்பு பேருந்துகள், விரைவு பேருந்துகள், ஸ்லீப்பர் வசதி கொண்ட நீண்ட தூர பயணத்திற்கான பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்குகின்றன. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பயணிப்பதால் தினசரி கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்கிறது. மேலும், கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. இதற்கு மாற்றாக தான் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் பரந்து விரிந்து, ஏராளமான வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
Wow....🥳
— Chennai Updates (@UpdatesChennai) April 26, 2025
One of the important bus hubs of Tamil Nadu is getting a massive upgrade and importantly this facility will be maintained by a Pvt player... #Trichy #Projects https://t.co/DD8xoBOQGe
40 ஏக்கர் - மே 9ல் திறப்பு விழா:
மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றாக 40 ஏக்கர் பரப்பளவில், 246 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை வரும் மே 9ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தற்போதைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை ஒட்டி வண்ணம்தீட்டுதல் போன்ற இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நகர்ப்புறத்தில் இருந்து விலகி, சற்றே வெளியே அமைந்து இருப்பதால் நகர்ப்புறத்தில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என நம்பப்படுகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் பணி முடித்து வீடு திரும்புவோர் இனி சிரமமின்றி பயணிக்கலாம் என கூறப்படுகிறது.
முழு ஏசி வசதி, 12 லிஃப்ட்கள்:
புதிய பேருந்து முனையாமனது இரண்டு அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. முற்றிலும் ஏசி வசதி கொண்ட முதல் தளமானது நகர பேருந்துகளை கையாளும். தொலைதூரத்திற்கான மஃப்சல் பேருந்துகள் கிரவுண்ட் லெவலிலும் இயக்கப்படும். முதல் தளத்திற்கு செல்வதற்கு ஏதுவாக 12 லிஃப்ட் மற்றும் எலிவேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு 52 கழிப்பிடங்களும், பொதுப்பணித்துறைக்கு 4 கழிப்பிடங்களும், பெண்களுக்கு 81 கழிப்பிடங்களும் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு 2 கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 21 குளியலறைகள், 173 சிறுநீர் கழிப்பிடங்களும் நிறுவப்பட்டுள்ளன. டிக்கெட் கவுண்டர்கள், ஃபுட் கோர்ட், எலெக்ட்ரானிக் அறிவிப்பு பலகைகள், கடைகள், பார்க்கிங் மற்றும் ஆட்டோக்களை நிறுத்துவதற்கான இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக பொதுமக்கள் ஏதேனும் கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவைகள்:
முத்தமிழைஞர் கலைஞர் எம்.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இதனை தனியார் நிறுவனம் பராமரிக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இங்கு நகர பேருந்துகள் 56, குறுகிய தூர பயணத்திற்கான பேருந்துகள் 84 மற்றும் நீண்ட தூர பயணத்திற்கான பேருந்துகள் 141 மற்றும் மஃப்சில் பேருந்துகள் 120 என மொத்தம் 401 பேருந்துகளுக்கான வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகர பேருந்துகளுக்கான மேல் தளம் கண்ணாடி பாக்ஸ்களால் மூடப்பட்டு, மெட்ரோ ரயில் நிலையம் போன்று காட்சியளிக்கிறது. பயணத்தை எளிதாக்குவதற்காக திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து முனையம், புதிய லாரி முனையம் மற்றும் காய்கறி சந்தை அருகே சுமார் 3 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழியாக ஒரு புதிய உயர்த்தப்பட்ட சாலை அமைக்கப்படுகிறது.
நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு:
அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தேவையை கையாள முடியாமல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் திணறி வருகிறது. இந்நிலையில் செயல்பாட்டுக்கு வரவுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம், நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைந்த்து பயணத்தை எளிதாக்கும். ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளால் இது மேம்படுத்தப்பட்ட பயண அனுபவத்தை வழங்கும். தமிழ்நாட்டின் பல்வேறு மூலை முடுக்குகளுக்கு மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கான பயணமும் இனி எளிதாகும் என நம்ப்படுகிறது.
மத்திய பேருந்து நிலைய என்ன ஆகும்?
புதிய பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வந்ததும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் என்ன ஆகும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, “புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதும், மத்திய பேருந்து நிலையம் நகரப் பேருந்து நிலையமாக மாற்றப்படும்.இது காரணமாக, நகர மற்றும் வெளியூர் பேருந்துகளின் கட்டணங்களில் சிறிய மாற்றங்கள் ஏற்படும்” என கூறப்படுகிறது.




















