எதுவும் நடக்கலாம்... திருமாவளவன் – மாஜி அமைச்சர் வைகை செல்வன் சந்திப்பு: பின்னணி என்ன?
தமிழ்நாட்டு அரசியலின் திசையை தீர்மானிப்பவர்கள் விடுதலை சிறுத்தை கட்சிகள் என்று தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர்: அரசியல் அரங்கில் இனி ஆட்டங்கள் அதிரடியாக இருக்க போகிறது. முக்கியமாக கூட்டணிகள் எப்படி அமையும் என்பதுதான். இந்த பரப்பில் விசிக தலைவர் திருமாவளவனை அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பார்த்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கிறது. இருந்தாலும் இப்போதே அட்ராசிட்டிகள் ஆரம்பம் ஆகிடுச்சு. ஒரு பக்கம் பாமகவுக்குள் குழப்பம் ஏற்பட்டு பரபரப்பை கிளப்ப... பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக அதிரடி காட்டியது. பாஜக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கூறியிருந்தனர். இந்நிலையில்தான் திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில் அதிமுக கூட்டணிக்கு விசிகவை இழுக்க முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதன் பின்னணி பற்றி பார்ப்போம்.
2026 தேர்தலுக்கு தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் தயாராகி விட்டன. முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் மாவட்டமாக ரோடு ஷோ நடத்தி மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்ற களத்தில் இறங்கி உள்ளார். ஆளும் கட்சி ஆன திமுக தமிழகத்தில் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில் அடுத்தடுத்து இரு சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைக்க போராடி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்ற பிறகு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Also
திமுகவை பொருத்தவரை கூட்டணி வலுவாக இருப்பதாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் அதையே சொல்லி வருகின்றன. தற்போதைக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஈஸ்வரனின் கொமதேக உள்ளிட்ட கட்சிகளும் சில அமைப்புகளும் இருக்கின்றன.
அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜக தான் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கிறது. கூடுதலாக ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரசும் இருக்கிறது. அந்த கட்சி கூட்டணிக்கு பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஐஜேகே, ஜான்பாண்டியனின் மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் வரலாம். இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். மேலும் சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் சுமார் அரை மணி நேரம் சந்தித்து பேசி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருமாவளவனை அதிமுக முன்னாள் அமைச்சரான வைகை செல்வன் தனியாக சந்தித்து பேசி இருக்கிறார். இதை அடுத்து இருவரும் தமிழ்நாடு அரசியல் நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அரை மணி நேரத்திற்கு மேலாக விவாதித்ததாக சொல்றாங்க. இதனால் அதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இணைக்க முயற்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநாட்டில் திருமாவளவன் பேசும் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவிடம் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது என்று அரசியல் தெரியாத அரைவேக்காடுகள் பேசுகின்றனர். தமிழ்நாட்டு அரசியலின் திசையை தீர்மானிப்பவர்கள் விடுதலை சிறுத்தை கட்சிகள் என்று தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறப்பட்டாலும் சில கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றன என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதற்கிடையே 2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு உள்ளிட்ட முழக்கங்களை விசிக எழுப்பி வருகிறது. இப்படியான சூழலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சரை திருமாவளவன் சந்தித்து பேசி இருப்பது கூட்டணி எதிர்பார்ப்பில் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் திருமாவளவன் கூட்டணிக்கு சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இருப்பினும் தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பது மாற்ற முடியாத ஒன்றுதானே. இருந்தாலும் இது அரசியல் நாகரீகத்தின் அடிப்படையில் யதார்த்தமாக நடைபெற்ற சந்திப்பு என்கின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.





















