திருச்சியில் ஊரடங்கு விதிகளை மீறிவர்களிடம் இருந்து இதுவரை 21 லட்சம் அபராதம் வசூல்
திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டு அமல்படுத்தபட்ட ஊரடங்கில் விதிகளை மீறியதாக இதுவரை சுமார் ரூபாய் 21 லட்சம் அபராதம் வசூல் செய்யபட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மற்றும் ஓமிக்ரான் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தொடக்கத்தில் இருந்தே அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகரில் முழுமையாக அமல்படுத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் திருச்சி மாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 8 சோதனை சாவடிகள், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது. திருச்சி மாநகரின் முக்கிய சந்திப்புகளான மத்தியபேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், TVS டோல்கேட், மன்னார்புரம் சந்திப்பு ஆகிய முக்கிய சாலை சந்திப்புகளில் காவல் ஆய்வாளர் தலைமையிலும் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலும் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது.
மேலும் ஊரடங்கு நேரத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரை நிறுத்தி விசாரணை செய்து. முகக்கவசம் அணிந்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் உரிய காரணமின்றி வெளியே சுற்றிதிரிந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராத தொகை வசூல் செய்யப்பட்டது. மேலும் மாநகரில் கூட்டம் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைகள் அருகில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், விதிகளை மீறும் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராத தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மாநகரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தேவையற்ற காரணங்களை கூறிக்கொண்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், மீறினால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரிக்கைவிடுத்தனர். மேலும் திருச்சி மாநகரத்தில் ஊரடங்கு நேரத்தில் 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
தமிழகத்தில் விதிக்கபட்டுள்ள ஊரடங்கை மீறினால் நடவடிக்கை எடுக்கபடும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 06.01.2022 தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து முககவசம் அணியாமல் வந்த 9734 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.19,46,800 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டது. குறிப்பாக சமூக இடைவெளியின்றி செயல்பட்டவர்கள் மற்றும் ஊரடங்கின்போது கடைகளை திறந்து வைத்திருந்த நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை சுமார் ரூ.21 இலட்சம் அபராத தொகையாக வசூல் செய்யப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்தனர். மேற்கண்ட முழு ஊரடங்கின்போது பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும், மருத்துவமனைகள், பால் விநியோகம், மற்றும் மருந்தகங்கள் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டது. மேலும் ஊரடங்கு நேரங்களில் அரசுக்கும், காவல்துறைக்கும் மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.