பள்ளிக்கூடமே இல்லாத கிராமத்தை சேர்ந்த மாணவிக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது
கறம்பக்குடி அருகே பள்ளிக்கூடமே இல்லாத குக்கிராமத்தை சேர்ந்த மாணவிக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்து படிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசு பள்ளிகளில் படித்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர உள்ளனர். இதற்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி ஊராட்சி பட்டமாவிடுதி கிராமத்தை சேர்ந்த சுபாஷினி (வயது 18) என்ற மாணவிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது. இவர் கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்றார். நீட் தேர்வில் 293 மதிப்பெண்கள் பெற்றார். மாணவி சுபாஷினிக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்ததை அறிந்து அவரது பெற்றோர்கள், உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து மாணவி சுபாஷினி கூறுகையில், "எனது தந்தை கருப்பையா, தாய் தேவிகா. நாங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம், ரேஷன் கடை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் நான் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அருகே உள்ள செவ்வாய்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியிலும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தேன். அரசு இடஒதுக்கீடு என்னை போன்ற கிராம பகுதி மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். எனது லட்சிய கனவு பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு நிறைவேறி உள்ளது. எனது மருத்துவ படிப்பை முடித்து கிராமப்புற பெண்கள் மருத்துவ மேம்பாட்டிற்காக பணியாற்றுவேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















