பொதுமக்கள் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டும் - அரியலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா முதல் அலை வந்தபோது பய உணர்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இரண்டாம் அலையின் போது அரசு பலமுறை எச்சரித்தும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டியதால் அதிக உயிரிழப்பும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட 259900 பேர்களில் இதுவரை 271415 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 277268 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. 18-45 வயதிற்குட்பட்ட 342100 நபர்களில் இதுவரை 349213 நபர்களுக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசி 344444 பேருக்கும் போடப்பட்டுள்ளது. 15-18 வயதிற்கு உட்பட்ட 34800 நபர்களில் முதல் தவணை தடுப்பூசி 35116 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி 30807 நபருக்கும் போடப்பட்டுள்ளது. 12-14 வயதிற்கு உட்பட்ட 22100 நபர்களில் முதல் தவணை தடுப்பூசி 24563 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி 17702 நபருக்கும் போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 658900 நபர்களில் 680307 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 670221 இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப் பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 9 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் 45 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்கள் 19,929 பேர்கள், இதில் குணமடைந்தோர் 19622 பேர்கள், இறந்தவர்கள் 267 பேர்கள் ஆகும். இந்நிலையில் மருத்துவமனை, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு 40 பேர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருவதால் முக கவசங்களை பொதுமக்கள் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும். மேலும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், திருமணம், இறப்பு நிகழ்வுகளில் குறைந்த அளவு மக்கள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது. அரியலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் முக கவசங்கள் அணியாமலும், தனி மனித இடைவெளியை பின்பற்றாமலும், அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வரும் கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைவரும் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்