பக்தர்களே! திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை நவராத்திரி உற்சவம் தொடக்கம்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நாளை கோலாகலமாக தொடங்குகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 23-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதில் உற்சவத்தின் முதல் நாளன்று பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைவார்.
நவராத்திரி உற்சவம்:
கொலு இரவு 7.45 மணிக்கு தொடங்கி இரவு 8.45 மணி வரை நடைபெறும். இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைவார். 2-ம் திருநாள் முதல் 6-ம் திருநாளான 20-ந்தேதி மற்றும் 8-ம் திருநாளான 22-ந் தேதி ஆகிய நாட்களில் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் திருநாளான 21-ந் தேதியன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான 23-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
விழா விவரம்:
இதேபோல் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அன்று முதல் 23-ந் தேதி வரை மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நவராத்திரி மண்டபம் வந்தடைகிறார். மாலை 6 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 7 மணிக்கு முடிவடையும். இரவு 7.15 மணி முதல் 8.15 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல் தீர்த்தகோஷ்டி பொது ஜனசேவையுடன் நடைபெறும்.
இரவு 8.30 மணிக்கு தயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இதில் நவராத்திரியின் 5-ம் நாளான வருகிற 19-ந்தேதி வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. அன்று மாலை 3.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு நவராத்திரி மண்டபம் வந்தடைகிறார். மாலை 4.15 மணி முதல் 6 மணி வரை பொதுஜன சேவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு கொலு முடிவடையும். இரவு 8 மணி முதல் 8.45 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி, பொது ஜனசேவையுடன் நடைபெறும். இரவு 9 மணிக்கு தயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
இதனை தொடர்ந்து வருகிற 23-ந்தேதி சரஸ்வதி பூஜையன்று மாலை 3.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 4 மணிக்கு நவராத்திரி மண்டபம் வந்தடைகிறார். மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுதல் நடைபெறுகிறது. இரவு 7 மணி முதல் 8.15 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல் தீர்த்தகோஷ்டி பொது ஜனசேவையுடன் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.