கோழி மிளகு குழம்பு..வாழை இலையில் இறைச்சி.. முட்டை லாப்பா.. திருச்சியில் கலக்கும் மணி உணவகம்..
அசைவ உணவுகளில் என்னதான் புதிதாக சமைத்து சாப்பிட்டாலும், ஒரு சில உணவுகள் நமக்கு எப்போதும் சலிக்காது.
திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் இல் உள்ளது 'மணி டிபன் கடை' இந்த உணவகம் மதியம் 1 மணி அளவில் செயல்பட தொடங்குகின்றது. இங்கு வகைவகையான அசைவ உணவுகள் கிடைத்தாலும், அங்கு கிடைக்கும் கோழி மிளகு குழம்பு மற்றும் முட்டை லாப்பாவுக்கு இருக்கும் சுவையே தனிதான். அப்படியே வாயில் வைத்தவுடன் கரைந்து விடும் முட்டை லாப்பா, கோழி மிளகு குழம்பு, சிக்கன் வருவல் ஆகியவற்றின் சுவைக்க ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்தக் கடை சிறியதாக இருந்தாலும் கூட்டத்திற்கு குறைவில்லாமல் இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் தற்போது கொரோனா என்பதன் காரணமாக விதிமுறைகளை பின்பற்றி பார்சல் தான் அதிகமாக வழங்கப்படுகிறது.
ஸ்பெஷலான கோழி மிளகு குழம்பு, மிளகு வாசனையுடன் சூடாக வாழையிலையில் பரிமாறப்படுகிறது. இந்த கோழி மிளகு குழம்பின் சுவை, எங்குமே சாப்பிடாத சுவையில் கிடைக்கிறது என்று அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பெரிய அளவில் மசாலாக்கள் எதுவும் சேர்க்காமல் மிகவும் சிம்பிளாக, மிளகின் காரம் சுவையுடன் தயாரிக்கின்றனர். அதேபோன்று, செயற்கை நிறங்களும் சேர்க்கப்படாமல் செய்கின்றனர். இதற்கு அவர்கள் கொடுக்கும் குஷ்கா, தோசையுடன் சேர்த்து சாப்பிடும்போது இதன் சுவை அமோகமாக உள்ளது. பணியாளர்களின் உபசரிப்பும் நமக்கு வீட்டில் சாப்பிடுவது போன்ற உணர்வை அளிக்கிறது என்கின்றனர்
இந்த கடையின் வளர்ச்சி பற்றி அதன் உரிமையாளர் சுப்பிரமணியம் கேட்டபோது, ”கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவில் தான் தனக்கு சொந்த ஊர் என்றும், வேலைக்காக திருவானை கோவிலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் தான் பார்த்த வேலை தனக்கு பிடிக்காத காரணத்தினால், இரண்டு வருடத்தில் வேலையை விட்டுவிட்டு இந்த டிபன் கடையை தொடங்கியதாக தெரிவித்தார். முதலில் இரவில் மட்டும் இயங்கி வந்த இந்த கடையில் சைவம் மட்டும்தான் செய்து கொடுக்கப்பட்டது என்றும் அவர் கூறுகிறார். ஆனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அசைவ உணவு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க இதை அசைவமாக மாற்றினோம். மேலும், செயற்கையான பொருள் எதுவும் சேர்க்கப்படாமல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். அதிலும் அனைவருக்கும் பிடித்தது கோழி மிளகு குழம்புதான் என்று பெருமையாக கூறுகிறார்.
அதிலும் பெரிதாக மசாலா சேர்ப்பது இல்லை. மிளகை மட்டும்தான் முழுக்க முழுக்க பயன்படுத்தி இந்த குழம்பை தயாரிக்கிறோம். கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக இந்த குழம்பு நான் மட்டும் தான் செய்கிறேன். மற்றவர்கள் செய்தால் அதற்கான சுவை வராமல் போய்விடுமோ என்ற பயத்தினால் நானே செய்கிறேன் என்றும் உரிமையாளர் சுப்பிரமணி தெரிவித்தார். அதேபோன்று 30 வருடங்களுக்கு முன்னால் முட்டை லாப்பா பற்றி பெரிதாக யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நம்ம கடையில் கொடுக்கத் தொடங்கியதும் எல்லாருக்கும் பிடிக்கத் தொடங்கிவிட்டது. அதனாலேயே நம்ம கடையை தேடி பலரும் வேறு வேறு ஊரில் இருந்து வருகிறார்கள் என்று பெருமையாக கூறினார்.
அதேபோன்று நடிகர் மற்றும் அரசியல்வாதியுமான நெப்போலியன், மறைந்த காடுவெட்டி குரு உள்ளிட்ட சிலர் திருச்சி பக்கம் வந்தாலே கண்டிப்பாக இங்கே சாப்பிட்டுவிட்டுத்தான் போவாங்க என்று பெருமிதமாக கூறுகிறார் சுப்பிரமணி. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 200 பேர் வரை இங்கே சாப்பிடுவார்கள். இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான கூட்டம் சேரக்கூடாது என்று பார்சல் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று சுப்பிரமணி தெரிவித்தார்.
மேலும் இந்த கடையைப் பற்றி பேசிய வாடிக்கையாளர், தனது நண்பர்கள் நிறைய பேர் கூறியதனால் இந்த கடைக்கு வந்ததாகவும், கடையோட அமைப்பை பார்த்ததும் பெரிதாக எதுவும் நன்றாக இருக்காது என்று தோன்றியதாகவும், சாப்பிட்டு பார்த்த பிறகுதான் இங்கு கிடைக்கும் உணவுகளின் சுவை வேற லெவலில் இருக்கிறது, என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
மேலும் இதைப் பற்றி கூறிய மற்றொரு வாடிக்கையாளர், இந்த முட்டை லாப்பா பஞ்சு போன்று உள்ளது என்றும் வாயில் வைத்தவுடன் கரைந்துவிடுகிறது இதற்கு நான் தனி ரசிகன் என்றும் பெருமிதமாக தெரிவித்தார். எனவே அசைவ உணவுப் பிரியர்கள், வகைவகையாக அசைவம் சாப்பிட வேண்டும் என்று நினைத்து விட்டாலே இந்த 'மணி டிபன் கடை'க்கு வந்து செல்லலாம். அசைவ உணவு கிடைப்பது மட்டுமின்றி அதன் சுவையும் நாக்கிலேயே தங்கி விடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.