திமுக உடனான நெருக்கத்தை ஓபிஎஸ் மகன் வெளிப்படுத்தியுள்ளார் - எடப்பாடி பழனிசாமி
போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தவறி விட்டது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என எடப்பாடி பழனிசாமி பேட்டி
திண்டுக்கல்லில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார். அதில் விசாரணை முடிந்த பின்புதான் தெரியும். அதற்கிடையில் அது குறித்து கருத்து கூற முடியாது. தி.மு.க. அரசின் புதுமைப்பெண் திட்டத்தை வரவேற்றதன் மூலம் ரவீந்திரநாத் (ஓ.பன்னீர்செல்வம் மகன்) ஏற்கனவே தி.மு.க.வுடன் இருக்கும் நெருக்கத்தை வெளிக்காட்டியுள்ளார். கூட்டுறவு சங்க தேர்தல் நேர்மையாக நடக்காது. அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்தினோம். ஆனால் உள்ளாட்சி தேர்தலை தி.மு.க. நேர்மையாக நடத்தவில்லை.
போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தவறி விட்டது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் - எடப்பாடி .பழனிச்சாமி @abpnadu @EPSTamilNadu pic.twitter.com/9c74CR47Vd
— Dheepan M R (@mrdheepan) September 7, 2022
கூட்டுறவு சங்க தேர்தலையும் அவர்கள் நேர்மையாக நடத்த மாட்டார்கள். இருந்தபோதும் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று போராடுவோம். இலவசங்கள் குறித்து ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. இலவசங்கள் வழங்குவது தவறு என்று பிரதமர் மோடி கூறுவது அவருடைய கட்சியின் நிலைப்பாடு. ஆனால் எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் சரி, ஜெயலலிதா ஆட்சியிலும் சரி எண்ணற்ற இலவச திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எதிர்காலத்திலும் நாட்டு மக்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்வோம். மக்களுக்கு எந்த வகையில் நன்மை பயக்கும் திட்டங்கள் இருக்குமோ? அதை செயல்படுத்துவோம்.
இந்தியா ஜனநாயக நாடு. அந்தந்த மதமும், தெய்வமும் அவரவருக்கு புனிதமானது. போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தவறி விட்டது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் முதலமைச்சர் அதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறார். சூதாட்டத்திற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். மக்களுக்கு நன்மை கிடைக்கும் எந்த திட்டத்தையும் தி.மு.க. செயல்படுத்தவில்லை. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்குகிறது. குற்றச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்