மாடுபிடி வீரர் அடித்து கொலை - 6 பேர் தலைமறைவு - போலீஸார் விசாரணை
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே முன்விரோதத் தகராறில் படுகாயமடைந்த மாடுபிடி வீரா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும், இதுதொடா்பாக 6 பேரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டாலோ, தொடர் திருட்டு ,கொலை சம்பவங்களில் ஈடுபட்டாலோ, சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ்.பி வருண்குமார் உத்தரவிட்டு உள்ளார். அதேசமயம் சரித்திர பதிவேடுகளில் உள்ள குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என செயல்படுகிறார்.
குற்றச்செயல்களில் ஈடுபட முயன்றால் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஒருவர் மீது தொடர்ந்து காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையினர் தீவிரமாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாடுபிடி வீரர் கொலை - 6 பேர் தலைமறைவு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நன்னிமங்கலம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ஜாா்ஜ் வில்லியம் மகன் அருண்ராஜ் (40). மாடுபிடி வீரரும் கூட. திருமணமான இவருக்கு பிளாரன்ஸ் மேரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா். அருண் ராஜ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே பகுதியைச் சோ்ந்த சவரிமுத்து மகன் தயாளன்(43) என்பவரும் மாடுபிடி வீரா். இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறாா். மேலும், தயாளன், அருண்ராஜ் இருவருக்கும் இடையே முன்விரோதத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தோ்தல் வாக்குப் பதிவுக்காக சொந்த ஊருக்கு வந்த தயாளன், வடக்கு அய்யன் வாய்க்கால் கரை பகுதியில் ஹானஸ்ட் ராஜ் (35), பிரபு (30), ஆ. சங்கா், அலெக்ஸ் மற்றும் அவரது சகோதரா் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்தாா்.
அப்போது அங்குவந்த அருண்ராஜூக்கும், தயாளனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், அருண்ராஜை தயாளன் உள்ளிட்ட 6 போ் சோ்ந்து சவுக்குக் கட்டையால் கடுமையாகத்தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அருண்ராஜ் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அருண்ராஜ் இறந்தாா். புகாரின்பேரில் லால்குடி காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து தயாளன் உள்ளிட்ட 6 போ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவா்களைத் தேடி வருகிறாா். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து சட்டரீதியான தண்டனையை பெற்று தரப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.