புதுக்கோட்டை மாவட்டத்தில் அகப்பைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்
தை திருநாளான பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களே உள்ள நிலையில் பாரம்பரியமிக்க அகப்பைகள் தயாரிப்பில் கீரமங்கலம் பகுதி தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தை திருநாள் உழவர்களின் அறுவடை திருவிழா. தை திருநாளை உலக தமிழர்கள் புத்தரிசியில் பொங்கல் வைத்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதிலும் பொங்கல் திருநாள் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள், தச்சு தொழிலாளர்கள் இப்படி ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் பயனடைகிறார்கள். நவீனமும் நாகரீகம் வளர்ந்திருந்தாலும் கூட இன்றுவரை மண் பானையில் பொங்கல் வைப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். அதேபோல தான் மண் பானை வாங்கியதும் தேங்காய் சிரட்டை, மூங்கில் குச்சியால் செய்யப்பட்ட அகப்பைகளையும் தேடிப்பிடித்து வாங்கிச் செல்கின்றனர். காரணம் நம்ம பாரம்பரியம், கலாசாரம் மாறக்கூடாது என்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றியுள்ள கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், மேற்பனைக்காடு, செரியலூர் உள்பட பல கிராமங்களிலும் உள்ள தச்சு தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக இரவு பகலாக அகப்பை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தொழிலாளி, பொதுமக்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு..
மேலும் கடந்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான அகப்பைகள் செய்துள்ளோம். எனக்கு விபரம் தெரிந்து சுமார் 60 வருடங்களுக்கு மேலாக அகப்பை செய்கிறேன். முன்பு அந்தந்த ஊரில் உள்ள மக்களிடம் கொடுத்து அவர்கள் தரும் நெல், அரிசி, தேங்காய், காய்கறி என எதை கொடுத்தாலும் வாங்கிக் கொண்டோம். இப்பவும் அந்த வழக்கம் எங்கள் கிராமங்களில் உள்ளது. அதே போல வெளியில் பொதுமக்கள் கேட்பதால் இரவு பகலாக தேங்காய் ஓடுகளில் நுனி பக்க சிரட்டைகளை வாங்கி சில நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து மேல் பக்க முடிகளை செதுக்கி அதற்கு மூங்கில் கம்புகள் வாங்கி பிடி அமைத்து கொடுக்கிறோம். எத்தனை நவீனங்கள் வந்தாலும் இந்த பொங்கல் நாளில் அகப்பை தான் பயன்படுத்த வேண்டும் என்று மக்களும் நினைக்கிறார்கள். இப்போதைய இளைஞர்களும் தேடி வந்து வாங்கி செல்வதால் தேவைகளும் அதிகரித்துள்ளது. அதனால் உற்பத்தியும் அதிகமாக உள்ளது. எந்த காலத்திலும் இந்த அகப்பைகளின் தேவைகள் அதிகரிக்குமே தவிர குறையாது. உற்சாகமாக பல வருடங்களுக்கு முன்பு முழுமையாக உடல் உழைப்பால் மட்டுமே தயாரிக்கப்பட்ட அகப்பைகள் தற்போது எந்திரங்களின் உதவியுடன் தயாரிப்புகள் நடக்கிறது. கடந்த ஆண்டு வரை ஒரு ஜோடி அகப்பை ரூ.50 க்கு விற்றது. இந்த ஆண்டு விலை உயர வாய்ப்புகள் உள்ளது.
நாங்கள் சின்ன வயதாக இருக்கும் போது உள்ளூர் தச்சர்கள் பொங்கலுக்கு 2 மாதம் முன்பே வீடு, வீடாக வந்து கண் பகுதியுள்ள சிரட்டைகளை சேகரித்து செல்வார்கள். சேகரித்து கொண்டு செல்லப்படும் சிரட்டைகளை தண்ணீரில் ஊறவைத்து மூங்கில் மரங்கள் வாங்கி வந்து குச்சிகளாக செதுக்கி காயவைத்த பிறகு அகப்பை செய்து வீடு, வீடாக கொண்டு வந்து கொடுப்பார்கள். திருமணம் செய்து கொடுத்துள்ள புதுமண தம்பதிக்கு பொங்கல் சீர் கொடுக்கும் பெண் வீட்டார் பொங்கல் பொருட்கள், கரும்பு கட்டு, மஞ்சள் வாங்கியதுடன் பொங்கல் வைக்க பித்தளை பானைகள் வாங்கினாலும் கூட சில்வர் கரண்டி இருந்தாலும் அகப்பைகள் வாங்கி கொடுப்பதை இன்றுவரை தொடர்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர்.