இந்திய கிரிக்கெட் அணியில் அரியலூர் இளைஞர்... ‛க்ளவுஸ்’ வாங்க கூட காசு இல்லாத நிலை!
‛‛கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு போதிய வசதி இல்லாததால், உபகரணங்களை கூட வாங்க முடியவில்லை’’ -சந்தோஷ்குமார்
அரியலூர் மாவட்டம் சிங்கார தெருவை சேர்ந்த தச்சுத் தொழிலாளியான சிவஜோதியின் மகன் சந்தோஷ்குமார்(வயது 27). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் சந்தோஷ்குமாருக்கு கை முறிந்து ஊனமுற்றார். எனினும் கிரிக்கெட் மீதான ஆர்வத்தின் காரணமாக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவர் மாவட்ட மற்றும் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்காக விளையாடி பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் 10, 11, 12-ந் தேதிகளில் நேபாளத்தில் நடைபெறக்கூடிய இந்தியா-நேபாள மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணியில் சந்தோஷ்குமார் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.மேலும் சந்தோஷ்குமாரின் நிலமையை நினைத்து மிகவும் கவலைபட்டோம், ஆனால் தற்போது அவனின் விடாமுறைச்சிக்கும், திறமைக்கும் கிடைத்த வெற்றி, இந்த தருணம் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பொற்றோர்கள் தெரிவித்தனர். குறிப்பாக அரியலூர் மாவட்டத்திற்கு என் மகன் பெருமை சேர்த்துள்ளான் என்றனர்.
இந்நிலையில் சந்தோஷ்குமாரின் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதால் பயிற்சிக்கான கிரிக்கெட் உபகரணங்கள் வாங்குவதற்கு கூட வசதி இல்லாமல் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து சந்தோஷ்குமார் கூறுகையில், ’’இந்திய அணிக்காக விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்காக சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்வேன். கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு போதிய வசதி இல்லாததால், உபகரணங்களை கூட வாங்க முடியவில்லை. இதனால் பல்வேறு தன்னார்வலர்களின் உதவிகளின் மூலம் உபகரணங்களை வாங்கி பயிற்சி பெற்று வருகிறேன். எனவே தமிழக அரசு, எனக்கு பயிற்சிக்கான உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று கோரிக்கை விடுத்தார்.
ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் அரியலூரை சேர்ந்த கார்த்தி, இந்திய அணிக்காக விளையாடி வரும்நிலையில், மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சந்தோஷ்குமார் விளையாட இருப்பது அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகளால் சாதிக்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அரியலூர் மாவட்டத்தில் இவர்கள் இருவரும் திகழ்கிறார்கள். மேலும் இவர்களை போன்று ஏழ்மையான குடும்பத்தில் இருந்து விளையாட்டு துறை மட்டும் அல்லாமல் எந்த துறையிலும் சாதிக்க துடிப்பவர்களுக்கு அரசு உதவி செய்தால் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவியாக அமையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.