11 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு
11 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் வரதராஜபெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் உலோக சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு செந்துறை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் சிலையை கண்டுபிடிக்க முடியாததால் வழக்கு முடிக்கப்பட்டது. பின்னர் 2020-ம் ஆண்டு இந்த வழக்கு சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தில் இணையதளத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பல்வேறு சிலைகளோடு, இந்த கோவிலில் இருந்து திருடப்பட்ட 4 சிலைகளை ஒப்பீடு செய்து பார்த்தனர். அப்போது திருடப்பட்ட 4 சிலைகளில் ஒன்றான ஆஞ்சநேயர் சிலை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததும், அங்கிருந்து ஏலம் விடப்பட்டதும் தெரியவந்தது. மேலும், அந்த சிலை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சிலையும், கோவிலில் திருட்டு போன சிலையும் ஒன்று தான் என புகைப்பட ஆதாரத்தை வைத்து தொல்லியல்துறை நிபுணர்கள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து அந்த சிலையை மீட்க தமிழக டி.ஜி.பி. மூலமாக உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தொடர் நடவடிக்கை காரணமாக ஆஸ்திரேலியாவில் அந்த சிலையை வைத்து இருந்த நபர், சிலையை ஒப்படைக்க முடிவு செய்தார். அதன்படி அவர், ஆஞ்சநேயர் சிலையை ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலமாக இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தார். பின்னர் அந்த சிலை பல்வேறு சோதனைகளுக்கு பிறகு, இந்திய தொல்லியல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலை டெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவால் பெறப்பட்டு கும்பகோணத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் மற்றும் அவரது குழுவை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்