Trichy: ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய கோயில் ஊழியர்கள் 3 பேர் கைது - போலீஸ் நடவடிக்கை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலுக்கு வந்த ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய கோவில் ஊழியர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து 2.50 லட்சம் பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர் காயம்:
இதற்காக 2,500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முதல் நாளான இன்று, ஏராளமான பக்தர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தந்து வருகின்றனர். குறிப்பாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து, 30க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இன்று காலை தரிசனம் செய்ய வரிசையில் நின்று கொண்டிருந்தனர். கருவறைக்கு முன்புறமுள்ள காயத்ரி மண்டபத்தில் ஐயப்ப பக்தர்கள் நின்று கொண்டிருந்த போது, ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவருக்கும், கோயில் செக்யூரிட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் செக்யூரிட்டிகளும், ஐயப்ப பக்தர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த பக்தர் சென்னாராவுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை தொடர்ந்து, அவர் காயத்ரி மண்டபத்திலே ரத்தம் சொட்ட சொட்ட அமர்ந்திருந்தார். இதைக் கண்டு அங்கிருந்த பக்தர்கள் கோபம் அடைந்து கூச்சலிட்டனர். அதையடுத்து, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர் அரங்கநாதன் உள்ளிட்டோர் கோயிலுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர பக்தர்களை அமைதிப்படுத்தி அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை தரப்பில் இருந்து வெளியிடபட்ட செய்தி குறிப்பில் தெரிவித்தது..
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலுக்கு ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சென்னாராவ், சந்தாராவ் சந்தா மற்றும் கட்டா ராமு ஆகியோர் சாமி தரிசனம் செய்ய ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மூலஸ்தானம் அருகில் உள்ள காயத்ரி மண்டபத்தில் இருக்ககூடியஉண்டியலை வேகமாக தட்டியுள்ளனர். இச்செயலை திருக்கோவில் ஊழியர் விக்னேஷ் என்பவர் உண்டியலை தட்டாதீர்கள் என்று கூறியதால், மேற்படி சென்னாராவ் மற்றும் சிலர் சேர்ந்து விக்னேஷ் தலைமுடியை பிடித்து உண்டியலில் மோதியுள்ளார். இதனால் கோவில் ஊழியர் பரத், செல்வா, விக்னேஷ் ஆகிய மூன்று நபர்களும் சேர்ந்து சென்னாராவை தாக்கியதில் மூக்கு உடைந்து ரத்த வழித்துள்ளது. மேலும் ஐயப்ப பக்தர்கள் மேற்படி கோவில் ஊழியர்களை தாக்கியதில் கோவில் ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு:
இதனை தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் காயத்ரி மண்டபத்தில் 20 நிமிடம் அமர்ந்து விட்டார்கள். இந்நிலையில் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கோவில் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சந்தாராவ் சந்தா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் மனு ரசீது எண்.919/23 வழங்கப்பட்டுள்ளது. கோவில் தரப்பை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஆந்திரபிரேதசத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்த புகாரின்பேரில் புகார் மனு ரசீது எண்.920/23 வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திர பக்தர்கள் அளித்த புகாரின்பேரில் வழங்கப்பட்ட மனு (ரசீது எண்.919/23) மீது மேல் விசாரணை மேற்கொண்டு, ஸ்ரீரங்கம் காவல் நிலையம் குற்ற எண் , 2992/23 u/s 323, 506(1) IPC-யின் படி நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவில் நிர்வாகத்தை சேர்ந்த 3 ஊழியர்களையும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.