திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருச்சி மாவட்டத்தில் தொடர் திருட்டு கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் - போலீஸார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் திருட்டு, கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழிபறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் திருச்சி மாவட்ட பொதுமக்கள் எதிர்க்கும் அஞ்சாமல் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்தும், அரசால் தடை செய்யப்பட்ட போதை பருட்கள் விற்பனைகள் செய்பவர்கள் குறித்தும் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.
திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக பொதுமக்கள் புகார் தெரிவிக்க அறிவிக்கபட்ட எண்ணிற்கு புகார் தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ் பி வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் - பொதுமக்கள் அச்சம்
இந்நிலையில் திருச்சி மாவட்டம், புலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட வெள்ளகல்பட்டி பகுதியில் வசிப்பவர் தண்டாயுதம் (55). இவரது மனைவி சந்திரா இவர்களுக்கு நித்யா என்ற மகளும், ரமேஷ் என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில் அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தோட்டத்தில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு கூலி வேலை செய்து வரும் நிலையில், நேற்று தண்டாயுதம் அவர் மனைவி சந்திரா, மருமகள் மீனா என்கிற காயத்ரி ஆகியோர் ஆடுகளை மேய்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். மீண்டும் மாலை வீடு திரும்பி வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அலங்கோலமாக துணிகள் தரையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மருமகள் காயத்ரி நகைகளை பீரோவில் வைத்திருந்த நிலையில் அவர் நகையை தேடிப் பார்த்தபோது 7 சவரன் நகை மற்றும் ரொக்கம் 15,000 திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து மருமகள் காயத்ரியின் மாமனார் தண்டாயுதம் புலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புலிவலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.