Sathanur Dam : சாத்தனூர் அணை நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
சாத்தனூர் அணையிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2500 கன அடி தண்ணீர் ஒன்பது கண் மதகு வழியாக வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோர உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2500 கன அடி தண்ணீர் ஒன்பது கண் மதகு வழியாக வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோர உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. தென்பெண்ணை ஆற்றில் இறங்கவோ கடக்கவோ குளிக்கவும் கூடாது என நீர்வளத்துறையினர் எச்சரிக்கை.
சாத்தனூர் அணையில் உபரி நீர் வெளியேற்றம்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சியில் உள்ள சாத்தனூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 119 அடி உயரத்தில் 116.40 அடி உள்ள நிலையில் முழு கொள்ளளவான 7321 மில்லியன் கன அடி நீர் இருப்பில் தற்பொழுது 6744 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது.
சாத்தனூர் அணையின் ஒழுங்குமுறை நடவடிக்கைகளின்படி 12.9.2025 மற்றும் 22-10-2025 அன்று முறையே முதல் மற்றும் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீர் வரத்திற்கு ஏற்ப உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, தற்போது 26-11-2025 இன்று காலை காலை நிலவரப்படி சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1180 கன அடியாக தண்ணீர் கொண்டிருக்கும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் 28-11-2025 முதல் மூன்று நாட்களுக்கு சாத்தனூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாத்தனூர் அணையில் இருந்து காலை 10 மணி அளவில் வினாடிக்கு 9 கண் மதகு வழியாக 2500 கன அடி அளவு வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீரின் அளவை பொருத்தும், சாத்தனூர் அணைக்கு மேலே உள்ள அணைகளில் திறக்கப்படும் உபரி நீரின் அளவைப் பொறுத்து சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் மேலும் அதிகரிக்கலாம் என்பதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ கடக்கவோ கூடாது என நீர்வளத் துறையின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களான குலமஞ்சனூர், திருவடத்தனூர், ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, எடத்தனூர், மலமஞ்சனூர், தொண்டமானூர், அல்லப்பனூர் மற்றும் சதாகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கக்கூடிய மக்கள் ஆற்றில் இறங்குவோ குளிக்கவோ வேண்டாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழை எச்சரிக்கை
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, அரியலூர், கோவை, கடலூர் , கன்னியாகுமரி, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர். தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















