(Source: ECI/ABP News/ABP Majha)
கிரிவலப்பாதையில் தூய்மை பணியாளர்களுடன் உணவருந்திய கலெக்டர் - தி.மலையில் நெகிழ்ச்சி
அண்ணாமலையார் கோயிலை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் தூய்மை பணியை மேற்கொண்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கி அவர்களுடன் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சாப்பிட்டார்.
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களும் சிறப்புமிக்க மாதங்களாக கருதப்படுகிறது. அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள் அண்ணாமலையார் கோயிலில் கோலாகலமாக நடைபெறும். திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதங்களிலும் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம். ஆண்டிற்கு ஒருமுறை சித்திரை மாதம் வரக்கூடிய சித்ரா பௌர்ணமி என்பது உலக பிரசித்தி பெற்ற ஒன்று. கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய 25 லட்சம் பக்தர்களை போலவே இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து பௌர்ணமி நிலவில் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி கடந்த 22ஆம் தேதி அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி 23ஆம் தேதி அதிகாலை 5:47 மணிக்கு நிறைவடைய உள்ளதாக அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சித்ரா பௌர்ணமியில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சுத்தும் பக்தர்களுக்கு கிரிவலப் பாதையில் பக்தர்களுக்காக 105 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. வாழை இலை, தையல் இலை, பாக்குமட்டை உள்ளிட்ட பொருட்களால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு கிரிவல பாதையில் அன்னதானத்தை சாப்பிட்ட பக்தர்கள் தட்டினை ஆங்காங்கே குப்பைகளா கொட்டப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலை மாவட்டதில் உள்ள திருவண்ணாமலை, எறையூர், கீழ்பென்னாத்தூர், செங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் ஊரகப்பகுதி 8 கிலோமீட்டருக்கு ஒரு கிலோமீட்டருக்கு 150 பேர் வீதம் (காலை 75 பணியாளர்களும், மாலை 75 பணியாளர்களும்) 22.04.2024 முதல் 25.04.2024 வரை 8 வட்டாரங்களிலிருந்து 1200 தூய்மை காவலர்கள் மூலம் தூய்மைப்பணிகள்
கிரிவலப்பாதையில் நடைபெற்றதை நேரில் சென்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், கூடுதல் ஆட்சியர் ரிஷப் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தூய்மை செய்து கொண்டு இருந்த தூய்மை காவலர்களிடம் சென்று சாப்பிட்டுவிட்டீர்களா என்று கேட்டறிந்து மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கி அவர்களுடன் ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் இருவரும் மதிய உணவு சாப்பிட்டனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கூடுதல் ஆட்சியர் இருவரும் தங்களுடன் உணவு அருந்தியது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தூய்மை காவலர்கள் பெருமிதமாக பேசினர்.
மேலும் நான்கு நாட்களில் 185 டன் மக்கும், மக்காத குப்பைகள் தூய்மைப்பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டதை ஆய்வு மேற்கொண்டார். இவர்களை கண்காணிக்க 300 நபர்களான வட்டார வளர்ச்சி அலுவலர் பொறியாளர்கள் என பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டார்.