திருவண்ணாமலை: 3000 ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு! தொல்குடியினரின் ரகசியங்கள் ?
"திருவண்ணாமலை மாவட்டத்தில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உருவம் கொண்ட பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன"

"திருவண்ணாமலை மாவட்டத்தில் 3000 ஆண்டுகள் முந்தைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் பெருங்கற்கால தொல்குடியினர் வரைந்த ஓவியம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்"
3000 ஆண்டு பழமையான பாறை ஓவியம்
திருவண்ணாமலையிலிருந்து தென்மேற்காக 10 கிலோமீட்டர். தொலைவில் அமைந்துள்ள பெரும்பாக்கம் - செ. அகரம் கிராம காட்டுப்பகுதியில் பறவை ஆர்வலர் சிவக்குமார், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் கோ. மதன்மோகன், சி.பழனிசாமி, ஸ்ரீதர், ம.பாரதிராஜா ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் இரண்டு இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன.
இரண்டு தொகுப்புகளாக அமைந்த இந்த ஓவியங்கள் செஞ்சாந்து நிறத்திலும் வெண்சாந்து நிறத்திலும் காணப்படுகிறது. செஞ்சாந்து நிற ஓவியங்கள் விலங்குகள், மனித உருவத்தையும் வெண்சாந்து நிற ஓவியங்கள் பண்பாட்டு நிகழ்வுகளையும் குறிக்கும் முக்கியமான பாறை ஓவியங்கள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாறை ஓவியத்தில் இருப்பது என்ன ?
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன் கூறியதாவது: பெரும்பாக்கம் கிராமத்தை ஒட்டிய, தரைக்காடு சிறிய மலைப்பகுதியில், கோவக்கல் என்ற பாறை முகப்பில் ஓவியங்கள் கண்டறியப்பட்டன. இந்த ஓவியங்கள் மனித உருவம் சதுரங்கங்களை கொண்டு வரையப்பட்டுள்ளது. ஒரு உருவத்தில் பன்றி ஆக்ரோஷமாக சண்டைக்கு விரைவது போல் உள்ளது. அதன் எதிரே மனித உருவம் இருப்பதை போன்று பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் கை மடக்கிய நிலையில், ஒரு மனிதன் கட்டப்பட்டுள்ளான், மற்றொரு ஓவியம் மனிதன், பல்லி போன்ற உருவங்கள் வரையப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பெருங்கற்கால தொல்குடிகள் வாழ்ந்த பகுதி
இந்த ஓவியங்கள் இரண்டடி நீளம் மற்றும் ஒரு அடி அகலத்தில் உள்ளன. இந்த உருவத்தில் தென்னை ஓலை போன்ற பொருட்களில் அலங்கரித்த பிரபை போன்ற அல்லது பாடையின் தோற்றத்தை ஒத்துள்ளது என தெரிவித்தார். இந்த ஓவியங்கள் வெண்சாந்து நிறத்தில் இருப்பதாகவும், 3000 ஆண்டு பழமையான பெருங்கற்கால பண்பாட்டின் தடையமாக இருப்பதாக தெரிவித்தார்.
அக்காலத்தில் வாழ்ந்த பெருங்கற்கால தொல்குடியின் ஒரு பண்பாட்டு சாட்சியாக இந்த ஓவியங்கள் விளங்குகிறது. மற்றொரு இடத்தில் பறம்பு பாறையில், செஞ்சாந்து நிற ஓவியங்கள் 5 அடி அகலம் மற்றும் 3 அடி உயரம் கொண்ட பெரிய விலங்கின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகள் தெளிவாகவும் மற்ற பகுதிகள் காலப்போக்கில் அழிந்ததாக தெரிகிறது. இந்த ஓவியம் பெரிய பன்றியின் உருவம் போன்று காணப்படுகிறது, வால் மற்றும் உடல் பகுதிகள் தெளிவாகத் தெரிகின்றன.
பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை
இதே உருவத்தில் எதிரே சித்திரை வேலைப்பாடான தீ மூட்டும் ஓவியம் போன்றும், அதன் அருகே ஒருவன் மகிழ்ச்சியாக கொண்டாடும் நிலையில், இருப்பதை போன்று ஒரு ஓவியம் உள்ளது. இந்த ஓவியமும் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என தெரிவித்தார்.
இதன் மூலம் திருவண்ணாமலையில் மிக அருகில் கிடைத்த மிகவும் தொன்மையான பாரிய ஓவியங்களில் ஒன்றாக இது இருக்கிறது என தெரிவித்தார். இதன் மூலம் திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் புதிய கற்காலத்திலிருந்து மக்கள் வாழ்ந்த பகுதி என்றும், ஓவியங்கள் வேட்டை சமூகத்தின் வாழ்வியலையும், பண்பாட்டையும் குறிக்கிறது. திருவண்ணாமலையின் மிக முக்கிய பண்பாட்டின் கலாச்சாரமாக இருக்கக்கூடிய இந்த பாறை ஓவியங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.






















