பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார ரீதியாக மற்றும் அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சிக்கிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

ABP Southern Rising Summit 2025: ஏபிபி குழுமம் நடத்திய ஏபிபி சதர்ன் ரைசிங் மீட்டிங் இன்று சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,
நாங்கள் ஒன்றிய அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு எதிரானவர்கள்.
தமிழ்நாட்டிற்கு சிறப்பு கவனம் வேண்டுமென நாங்கள் கோரவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் நியாயமான மதிப்பினை வழங்க வேண்டும் என கோருகிறோம். வலுவான மாநிலங்களே வலுவான நாட்டை உருவாக்குகின்றன. கூட்டாட்சி என்பது பேரம் பேசுவதற்கானது அல்ல. இது இந்தியாவின் ஒற்றுமைக்கான அடித்தளம். ஒன்றிய அரசின் முயற்சிகள் தொடரும் வரையிலும், மாநில அரசுகளின் உரிமைகள் மறுக்கப்படும் வரையிலும், மாநில அரசுகளை தங்களுக்கு கீழ்படிந்தவர்களாக கருதும் வரையில் திமுகவும், அதன் தலைவருமான ஸ்டாலின் முன் நின்று பேசுவார், போராடுவார்
கோவை மெட்ரோ:
என்னைப் பற்றி சொன்னது எல்லாம் சாதனை அல்ல. அதை எங்கள் கடமையாக செய்து கொண்டிருக்கிறோம். அதைத்தான் எங்கள் முதல்வர் எங்களிடம் எதிர்பார்த்தது. அதை செய்து கொண்டிருக்கிறோம். ஏபிபி குழுமம் என்னை மீண்டும் அழைத்ததற்கு மிக்க நன்றி.
மத்திய அரசு எங்களை எப்படி ஒன்றிய அரசு என்று அழைக்கலாம் என்று கூறுகின்றனர். ஒன்றிய அரசு கோவையில் மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்கு காரணம் போதிய மக்கள்தொகை இல்லை என்று கூறிவிட்டர்கள். தமிழ்நாடு ஆளுநர் மாநிலத்தின் பெயரை மாற்ற நினைத்தார். பின்விளைவுகள் வந்த பிறகு வேண்டாமென்று விட்டுவிட்டார்.
பலவீனமாக்க பாஜக முயற்சி:
மத்திய அரசு அனைத்து அதிகாரத்தையும் தங்கள் வசம் வைத்துக்கொள்ள பார்க்கிறது. பொருளாதார ரீதியாக வலுவான மாநிலங்களை அரசியல் ரீதியாக பலவீனமாக்கவும், அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பொருளாதர ரீதியாக பலவீனமாக்க பாஜக முற்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.





















