Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சமூகநீதி பேசப்படும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, அதில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற ஏபிபி குழுமம் நடத்திய ABP Southern Rising Summit நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசினார். அப்போது, சமூகநீதியின் சாம்பியன் என சொல்லப்படும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது துரதிஷ்டவசமானது என தெரிவித்ததோடு, அதில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
“சாதி வாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன“
இந்த நிகழ்ச்சியில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டியதன் அவசியம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதை இட ஒதுக்கீட்டிற்காக மட்டும் கேட்டவில்லை என்றும் அது அதன் பலன்களில் இட ஒதுக்கீடு என்பது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே என்றும், அதையும் தாண்டி, சமூக நிகழ்வுகளில் பங்கெடுப்பு, வங்கிக் கடன் பெறுவது, ஸ்காலர்ஷிப், அரசு டெண்டர்கள் என பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளதாகவும் அன்புமணி தெரிவித்தார்.
“90 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பை தான் பயன்படுத்துகிறார்கள்“
மேலும், கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான தரவுகள், அதாவது இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே, 1931-ல் பிரிட்டிஷார் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து தான், மத்தியிலும், மாநிலங்களிலும் இன்று வரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும், அந்த சமயத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 28 கோடி தான் இருந்தது என்றும் அன்புமணி தெரிவித்தார்.
2015-ல் முதல் மாநிலமாக கர்நாடகா தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது என்று கூறிய அவர், பறவைகள், இருப்பிடம் இல்லாமல் சுற்றித் திரியும் நாய்கள், மாடுகள் போன்ற விலங்குகளுக்கு கூட கணக்கெடுப்பு வைத்துள்ளோம், ஆனால் நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டுள்ள மனிதர்களுக்கான கணக்கெடுப்பை நடத்தவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
“சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது துரதிஷ்டவசமானது“
அதோடு, 6 மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை முடித்துவிட்டார்கள் அல்லது கிட்டத்தட்ட முடிக்கும் தருவாயில் உள்ளனர் என்று கூறிய அன்புமணி, ஆனால், சமூக நீதி பேசப்படும் தமிழ்நாட்டில், சமூக நீதி சாம்பியன் என கூறப்படும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாததை எண்ணி வெட்கப்படுவதாக தெரிவித்தார்.





















