கூட்டத்தை பயன்படுத்தி 6 பவுன் நகை, செல்போன் கொள்ளை - தி.மலை பேருந்து நிலையத்தில் பயணி அதிர்ச்சி
திருவண்ணாமலை பேருந்து ஏறிய பயணிகளின் செல்போன் 6 பவுன் தங்கசரடு ஆகியவற்றை கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த சம்பந்தனூரைச் சேர்ந்தவர் காத்தவராயன் வயது (48). இவர் குடும்பத்தினருடன் சேலத்தில் வசிக்கிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் சொந்த கிராமத்துக்கு குடும்பத்தோடு வருகை புரிந்தார். பின்னர் கோத்தந்தவாடியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கலுக்கு குலதெய்வ வழிபாடு முடிந்த பின்பு சேலம் செல்வதற்காக திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு எல்லோரும் நேற்று முன்தினம் இரவு வந்துள்ளனர். அப்போது பேருந்து கிடைக்காததால் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் பேருந்து வந்ததும் அதில் ஏற முயன்ற போது கூட்ட நெரிசலில் அதிக அளவில் இருந்ததால் இதனால் பேருந்தில் ஏற முடியாமல் கூட்டத்திலிருந்து வெளியே வந்தனர். அப்போது காத்தவராயன் சட்டை பாக்கெட்டில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் அவர் மனைவியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி சரடு ஆகியவற்றை மர்ம நபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பறித்து கொண்டு சென்றதும் அதிர்ச்சி அடைந்தனர்.
கண்டுகொள்ளாத காவல்துறை
இதுகுறித்து திருவண்ணாமலை காவல் நிலையத்தில் காத்தவராயன் புகார் அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறையிடம் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் அவரை அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட காத்தவராயன் கூறியதாவது; திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 9:45 மணிக்கு எனது செல்போன் மனைவியின் 6 பவுன் தாலி சரடு திருடு போனது. இதுகுறித்து பேருந்து நிலையத்தில் உள்ள ஓபி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன். அப்போது அங்கு காவல்துறையினர் யாரும் கிடையாது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக காத்திருந்தும் காவல்துறையினர் வராததால் கிழக்கு காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தேன். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் காலையில் வாருங்கள் என அனுப்பிவிட்டனர். அதன்படி மறுகாலை காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்த போது காவல்துறையினர் என்னை அழைத்துக் கொண்டு பேருந்து நிலைய கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய வந்தார்.
பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பழுது
அங்கு வந்து பார்த்தபோது பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா கடந்த ஜூன் மாதத்தில் இருந்து செயலிழந்து விட்டதாக தெரியவந்தது. அதன் பின்னர் காவல்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் சேலம் செல்லுங்கள் நாங்கள் வழக்கு பதிவு செய்துவிட்டு உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம் எனக் கூறி என்னை அனுப்பி விட்டனர். இதே போன்று நேற்று இரவு மற்றும் மூன்று செல்போன் திருட்டு இரண்டு பேரிடம் நகைப் பறிப்பு புகார் வந்தது பல லட்சம் பக்தர்கள் வந்து செல்லும் திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கண்காணிப்பு கேமராவை கூட காவல்துறையினர் பராமரிக்க முடியவில்லை, மாவட்ட தலைநகரத்திலேயே இப்படி இருந்தால் திருட்டு கொலை சம்பவங்கள் நடந்தால் காவல்துறையினர் எப்படி குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள் இதுதான் ஆன்மீக நகருக்கு வரும் பல லட்சம் பக்தர்களுக்கு காவல்துறையினர் கொடுக்கும் பாதுகாப்பா என இவ்வாறு கூறிவிட்டு அதனுடன் புறப்பட்டு சென்றார்.