திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 25 கோடி மதிப்பில் சுகாதார கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சு
தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்து அதிகமாக பிரசவங்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தான் நடக்கின்றது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ1.20 கோடி மதிப்பீட்டில் கட்டண படுக்கை பிரிவு, 10 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு பிரிவு, ரூ.25 இலட்சம் மதிப்பில் தாய்
மற்றும் பச்சளங்குழந்தைகள் சிறப்பு கவனிப்பு பிரிவு கட்டிடத்தினையும் சுகாதார அலகு கட்டிடம் என மொத்தம் ரூ13.28 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய கட்டிடங்கள் மற்றும் பிரிவுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி முன்னிலை வகித்தனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது:
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.13 கோடி 28 இலட்சம் மதிப்பீட்டில் 7 கட்டிடங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆன்மீகத்திற்கு என்று பல பகுதிகள் இருந்தாலும் திருவண்ணாமலை
ஆன்மீகத்தின் உச்சமாக திகழ்ந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் 1950 ஆம் ஆண்டில் முதன் முதலில் காது கேளா மருத்துவமனை துவங்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டில் மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது.
மருத்துவத்தில் வல்லுநர்களாக இருந்தால் தான் சிறப்பான மருத்துவத்தை செய்து குணமாக்க முடியும். அதனடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் தான் 2010 ஆம் ஆண்டில் திருவண்ணாமலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உருவாக்கினார்கள். இந்த மருத்துவமனையில் ஏறத்தாழ தினமும் 3000 முதல் 3500 புறநோயாளிகள் பயன்பெறுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக மருத்துவமனையில் இருக்கின்றனர். இந்த மருத்துவக்கல்லூரியில் இதுநாள் வரையில் 586 மாணவர்கள் மருத்துவ படிப்பை முடித்திருக்கிறார்கள். 2021 -22 கல்வி ஆண்டில் 6 முதுகலை பட்டம் துவங்கப்பட்டு 30 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். திருவண்ணாமலை மருத்துவமனைக்கு நமது மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்களும் வருகை தந்து சிகிச்சை பெறுகின்றனர். தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்து அதிகமாக பிரசவங்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தான் நடக்கின்றது. வருங்காலங்களில் இந்த மருத்துவமனை இன்னும் பல்வேறு சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் 13 கோடியே 28 லட்சத்தில் ஏழு புதிய மருத்துவப் பிரிவுகள் இங்கு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஏழு மருத்துவ பிரிவுகள் வேண்டுமென்று இங்கிருக்கும் மக்கள்
பிரதிநிதிகளால் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவற்றையெல்லாம் நிறைவேற்ற உத்தரவிட்டார்கள். ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு சீமாங என்ற கட்டிடம் ஏற்கனவே மூன்று தளங்களுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது மேலும் விரிவுப்படுத்தப்பட்டு 10 கோடி மதிப்பீட்டில் நான்கு மற்றும் ஐந்தாவது தளம் விரிவுப்படுத்தப்பட்டும். கட்டண படுக்கை அறைகள் கொண்ட15 அறைகள் திறந்து வைக்கப்பட்டது. இது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் தான் இருந்தது இதை விரிவுபடுத்த முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டமாக திறந்து வைக்க உத்தரவிட்டுள்ளார்கள், அதிதீவிர சிகிச்சை பிரிவுக்குரிய வசதிகளின் கூடிய அறை, பல வசதிகளுடன் கூடிய படுக்கை அறைகள் அரசு மருத்துவமனைகளில் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் 200 கட்டண படுக்கையில் அறைகள் உள்ளது. இதேபோன்று இந்தியாவில் இரண்டு மருத்துவமனைகள் தான் தேசிய முதியோர் மருத்துவமனை உள்ளது. ஒன்று டெல்லி எய்ம்ஸ் மற்றொன்று கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிகிச்சை மருத்துவமனை இன்னும் பிற மாவட்டங்களில் இது போன்ற கட்டண படுக்கை அறை திறந்து வைக்க பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. திருவண்ணாமலையில் 15 கட்டண படுக்கை அறையில் 9 தனி படுக்கையறை இரு படுக்கை அறை நான்கு பேர் சிகிச்சை பெறும் படுக்கையறை இரண்டும் இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று செய்யாறு, வந்தவாசி, படவேடு மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மட்டும் ரூ 25 கோடி மதிப்பீட்டிலான சுகாதார கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மணி, மருத்துவக்கல்லூரி இயக்குநர் மரு. சங்குமன் கலந்து கொண்டனர்.