IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் நடந்த கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் முடிவுக்கு வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 4வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்தது.
காயத்தால் ஆடாத பும்ரா:
இந்த நிலையில், கட்டாய வெற்றி நெருக்கடியுடன் இந்திய அணி சிட்னி டெஸ்டில் களமிறங்கியது. இந்த தொடர் முழுவதும் பேட்டிங்கில் சொதப்பியது போல இந்த போட்டியிலும் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. வெறும் 4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி இன்று காலையிலே 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
162 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கேப்டன் பும்ரா இல்லாமல் இந்திய அணி பந்துவீச்சைத் தொடங்கியது. நேற்று ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா இன்று பந்துவீசவில்லை. பும்ராவின் வெற்றிடம் நன்றாகவே தெரிந்தது.
கான்ஸ்டோஸ் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினார். 17 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 22 ரன்களுக்கு அவர் அவுட்டாக, அடுத்து வந்த லபுஷேனே 6 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்னிலும் அவுட்டாக 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி:
அதன்பின்பு, கவாஜா ஹெட்டுடன் ஜோடி சேர்ந்து ஒருநாள் போட்டி போல ஆடினார். அவர் 45 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்து அவுட்டாக அடுத்து வந்த வெப்ஸ்டர் மேற்கொண்டு விக்கெட் விழாமல் ஆடினார். இலக்கு குறைவாக இருந்ததால் ஹெட் - வெப்ஸ்டர் ஜோடி நிதானமாக ஆடி இலக்கை அடைந்தது.
இதனால், 2014-15ம் ஆண்டுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. 11 ஆண்டுகள் பார்டர் - கவாஸ்கர் டிராபியை தங்கள் வசம் வைத்திருந்த இந்தியா தற்போது அதை நழுவவிட்டுள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியா அவர்களது சொந்த மண்ணில் பார்டர் கவாஸ்கர் டிராபியை மைக்கேல் கிளார்க் - ஸ்மித் கேப்டன்சியில் கைப்பற்றியிருந்தது. இந்தியா தற்போது 3-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. தற்போது கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் டிராபியை கைப்பற்றியுள்ளது. 2016/17, 2018/19, 2020/2021, 2022/23 ஆகிய ஆண்டுகளில் நடந்த தொடரை இந்தியா வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோசமான பேட்டிங்:
இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது மோசமான பேட்டிங்கே ஆகும். ரோகித், விராட் கோலி மட்டுமின்றி நிலையான பேட்டிங்கை எந்த வீரர்களும் வெளிப்படுத்தவில்லை. முன்னதாக, இந்த டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 185 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகிய நிலையில், ஆஸ்திரேலியா 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்காக ரிஷப்பண்ட் 33 பந்துகளில் 61 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொதப்ப இந்தியா 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்த தொடரில் கவுதம் கம்பீரின் பயிற்சி, இந்திய வீரர்களின் பேட்டிங், பும்ரா தவிர மற்ற பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட உள்ள நிலையில், ஒட்டுமொத்த அணியும் மறுசீரமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.