பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவினுடைய பொருளாதாரம் சீரழிந்து விட்டது - கே.எஸ். அழகிரி
கள்ள ஓட்டு போடுவதும் பாஜகவின் வாடிக்கை. இதுதான் பாஜகவின் ஜனநாயகம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்தார் .
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி இல்ல திருமண விழாவில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் பொருளாதாரம் எங்கே வளர்ந்து இருக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருகிறேன் என்று சொன்னார்கள் வேலை தந்தார்களா, விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக ஆக்குகிறேன் என்று சொன்னார்கள் செய்தார்களா பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு கருப்பு பணம் மீட்கப்பட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று சொன்னார்கள் போட்டார்களா, கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்தார்களா, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு புதிய தொழிற்சாலைகள் வந்துள்ளதா, எந்த வகையில் இந்தியாவின் பொருளாதார முன்னேறி இருக்கின்றது, அண்ணாமலை, மோடி மற்றும் சமீபத்தில் நடந்த குடியரசுத் தலைவரின் உரையில் சொல்ல முடிந்ததா என்று கேள்வி எழுப்பினார்.
இந்தியாவினுடைய பொருளாதாரம் சீரழிந்துள்ளது
பொதுவாக மேடையில் ஏறி இந்தியாவினுடைய பொருளாதாரம் வளர்ந்து விட்டது என்று சொன்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது இந்திய கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் மூலமாக 15 கோடி குடும்பங்களை வறுமை பிடியில் இருந்து வெளியே கொண்டு வந்தார், அதனை ஐ.நா மன்றம் பாராட்டி சான்றிதழ் வழங்கி இருக்கின்றார்கள், தங்கள் ஆட்சியில் பணம் வீக்கம் குறைக்கப்பட்டு 70 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கும் பெட்ரோல் கொடுக்கப்பட்டது, தங்கள் ஆட்சியில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகமாக இருந்தது, ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்தது, இன்றைக்கு உலகத்தில் கச்சா எண்ணெய்யின் விலை குறைவாக இருக்கின்றது. ஆனால் உலகத்திலேயே அதிக விலைக்கு பெட்ரோலையும், டீசலையும் விற்பது மோடி அரசாங்கம் தான். அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவினுடைய பொருளாதாரம் சீரழிந்து உள்ளது. அதனால் தான் அவர்கள் மற்றதை பேசுவதை விட்டுவிட்டு ராமர் கோவில் கையில் எடுத்துள்ளனர். ராமருக்கு கோவில் கட்டக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை, எல்லாருமே ராமருடைய பக்தர்கள் தான், வட இந்தியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் கூட ராமர் கோவிலை கட்டுங்கள் என்று தான் சொல்கிறார்கள்.
ஏன் பாபர் மசூதி இடிக்கப்பட்டது
மசூதியை இடித்துவிட்டு ராமருக்கு என்று தனியாக கோவில் கட்ட வேண்டாம் என்று தான் அன்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. கட்சிகள் சொன்னது, அயோத்தியில் 3200 ராமர் கோவில்கள் இருக்கின்றது, இன்றைக்கு மோடி கட்டி உள்ளது 3201-வது கோவில் அவ்வளவு தான் என்று தெரிவித்தார். பாபர் மசூதி இருந்த இடத்திற்கு 3 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ஏன் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மக்களை திசை திருப்புவதற்காக எல்லாவற்றிலும் பொய் சொல்கின்றனர். இதனைத் தவறு என்று காங்கிரஸ் சொல்கிறது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு எல்லா இடத்திலும் ஏராளமான மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். கோவில் கட்டுவதால் இன்றைக்கு தேர்தலில் யாரும் ஜெயித்து விட முடியாது. முழுமையாக பணிகள் முடிந்த பிறகுதான் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ராமர் கோவிலில் அவசர அவசரமாக கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ளனர். இதற்கு என்ன பொருள் என்றால் ராமரை மனதில் வைத்து செய்யவில்லை, தேர்தலை மனதில் வைத்து செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரே ஒரு நெல்லிக்காய்
இதை ஆன்மிகவாதிகளே தவறு என்று சொல்கிறார்கள். ராமர் கோயில் என்பது அரசியலுக்காக நடப்பதே, தவிர ஆன்மீகத்திற்காக நடக்கவில்லை. இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது, சண்டிகர் மேயர் தேர்தலில் குறுக்கு வழியில் பாஜக வெற்றி பெற்றது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அழகிரி சண்டிகரில் பாஜக தோல்வி அடைந்து விடும் என்பதற்காகவே இது போன்று குறுக்கு வழியில் வெற்றி பெற்றது என்று விமர்சித்தார். மேலும் பாஜக அரசு நகராட்சி தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலிலும் தோல்வி அடையக் கூடாது என்பதற்காகவே தேர்தலை தள்ளி வைப்பதும், கள்ள ஓட்டு போடுவதும் பாஜகவின் வாடிக்கை இதுதான் பாஜகவின் ஜனநாயகம் என்றும் விமர்சித்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியா கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்தியா கூட்டணி நெல்லிக்காய் போன்று சிதறிவிடும் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கே.எஸ்.அழகிரி ஜெயக்குமாரே ஒரு நெல்லிக்காய் என்றும் விமர்சித்தார்.