‘நீங்கள் வந்தால் தான் சாலைகள் எல்லாம் புதிதாக போடுகிறார்கள்’ - முதல்வர் விழாவில் பாஜக எம்எல்ஏ பேச்சு
பிரதான அணையான பாபநாசம் - மணிமுத்தாறு அணைகளை டணல் மூலம் இணைக்க வேண்டும். இதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து முயற்சிகள் எடுக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சியில்,
ரூ.330 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகள் தொடங்கி வைத்தால் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
நெல்லை மாநகராட்சி சார்பில் இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவடைந்துள்ள 5 பணிகளை அவர் தொடங்கி வைத்தார். பாளையங்கோட்டை மனக்காவலன்பிள்ளை சாலையில் ரூ.3.06 கோடியில் பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ள மேடைகாவல் நிலையம், அதே சாலையில் ரூ. 9.88 கோடியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு சேவை மையம், ரூ.15.12 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள வ.உ.சி. மைதானம், ராமையன்பட்டியில் 2 மெகாவாட்டில் முடிக்கப்பட்டுள்ள 2 சோலார் பேனல் மையங்களை தொடங்கி வைத்தார். நெல்லை மாநகராட்சி பகுதியில் சுமார் ரூ.54.82 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டப்பணிகள் தொடங்கி வைத்தார். அதன்படி நெல்லை மாநகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சட்டக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆகிய துறைகளின் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், முன்னோடி வங்கி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் கல்வி உதவி பெறுதல், வேளாண் பொறியியல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, பள்ளிக்கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை (சமூகப்பாதுகாப்பு திட்டம்), முன்னாள் படைவீரர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, உணவு பொருள் வழங்கல் துறை, வனத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 30,658 பயனாளிகளுக்கு ரூ.330 கோடியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடியான காணி இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, அவர்கள் வாழும் பகுதியிலேயே வாழ்விடத்தற்கான பட்டா கேட்டிருந்தார்கள். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்களின் சீறிய முயற்சியால், இன்று காணி இன மக்கள் 78 பேருக்கு தமிழக முதல்வர் பட்டா வழங்கினார். இதனையொட்டி விழா நடைபெறவுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மூன்றடுக்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அவசர கதியில் போடப்பட்ட சாலைகள்
முன்னதாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நெல்லை தொகுதி பாஜக எம் எல் ஏ நயினார் நாகேந்திரன் கூறும் பொழுது, எதிர்க்கட்சியாக இருந்தாலும் திருநெல்வேலி தொகுதிக்கு கலைக்கல்லூரி தந்துள்ளார் முதல்வர் அவருக்கு எனது பாராட்டுகள். ஒவ்வொரு கால கட்டத்திலும் நெல்லை மாவட்டத்திற்கு வரும் முதலமைச்சர்கள் சரித்திரத்தில் இடம் இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. அதன்படி அந்த பட்டியலில் தமிழக முதல்வர் இடம் பெற வேண்டும். குறிப்பாக பிரதான அணையான பாபநாசம் - மணிமுத்தாறு அணைகளை டணல் மூலம் இணைக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து முயற்சிகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதே போல மானூர் பெரிய குளம் 286 மில்லியன் கன அடி கொண்ட குளம், அந்த குளத்திற்கு பாபநாசத்தில் இருந்து அணைக்கட்டு கட்டி மானூர் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும். இதன் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை பிரிவில் 6 மருத்துவர்கள் தேவையில் 3 பேர் மட்டுமே உள்ளனர். கூடுதலாக 3 மருத்துவர்கள் நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வெள்ளக் காலத்தில் 20, 30 டி எம் சி தண்ணீர் வீணாக கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். இறுதியாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறும் பொழுது, நீங்கள் வந்தால் தான் சாலைகள் எல்லாம் புதிதாக போடுகிறார்கள். எனவே நீங்கள் அடிக்கடி வர வேண்டும் அப்போது தான் மக்களுக்கு நல்ல சாலைகள் கிடைக்கும் என்று நாசுக்காக கலாய்த்து பேசி முடித்தார்.