“காவல் ஆய்வாளர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்” - பெண் பரபரப்பு புகார்
”விஜய நாராயணம் காவல் ஆய்வாளர் தங்களது புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைபட்சமாக செயல்படுவதோடு தங்களை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக புகார்”
நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா வடக்கு இலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் மலர்விழி. இவர் விஜய நாராயணம் காவல் நிலைய ஆய்வாளர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவரிடம் புகார் அளித்தார்.
அப்போது அவர் அளித்த புகார் மனுவில், தங்களது குடும்பத்தில் ஆண் வாரிசு என்பது இல்லாத நிலையில் வயது முதிர்ந்த தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறேன். தங்களது வீடு இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதனால் அந்த இடத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்ட முடிவு செய்து கட்ட ஆரம்பித்தோம். ஆனால் ஆண் வாரிசு இல்லாத வீடு என்பதால் தூரத்து உறவினரான எங்களது வீட்டின் பின் பகுதியில் வசிக்கும் அருள் என்பவர் எங்கள் வீட்டை அபகரிக்க திட்டம் தீட்டி வந்தார். அதன் பின் விலைக்கு தருமாறு கேட்டார்.
ஆனால் நாங்கள் கொடுக்க மறுத்து விட்ட நிலையில் வீடு கட்ட விடாமல் செய்து விடுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்து வீட்டின் முன் பல்வேறு தடுப்புகளை ஏற்படுத்தி வீட்டு வேலைகளை தடுத்து நிறுத்தினார். இதுகுறித்து விஜயநாராயணம் காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தோம். ஆனால் அந்த புகார் தொடர்பாக மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல் ஆய்வாளர் சர்வே செய்த பின் கட்டுமாறு கூறினார். அதன்படி செய்த பின்பும் வேலையை தடுத்ததோடு அருள் என்பவர் எங்களை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக வழக்குபதிவு செய்த காவல் ஆய்வாளர் 20 நாட்கள் வரை கட்டுமான வேலையை செய்யக்கூடாது என கூறினார். ஆனால் எங்களை தடுத்து நிறுத்திய நிலையில் அருள் என்பவர் தன் மீது வழக்கு பதிவு இருந்தும் காவல் ஆய்வாளரின் மறைமுக ஒத்துழைப்போடு எங்களது வீட்டின் கட்டுமான வேலையை செய்ய முடியாத அளவில் சுவர் எழுப்பும் வேலையை செய்தார். இது தொடர்பாக காவல் ஆய்வாளரிடம் மீண்டும் புகார் அளித்தோம். அதனை கண்டுக்கொள்ளாத காவல் ஆய்வாளர் எங்களை மிரட்டத் தொடங்கினார். இதனால் மனமுடைந்த நாங்கள் மாவட்ட காவல் ஆய்வாளரிடம் முறையிட்டோம். இதனால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் ஏதாவது வழக்கில் கைது செய்து விடுவதாக மிரட்டி அவதூறாக பேசினார்.
அனைத்து ஆவணங்களையும் வைத்துக்கொண்டு முறையாக வீடு கட்டும் எங்கள் நிலத்தை எவ்வித ஆவணமும் இன்றி அபகரிக்க முயலும் அருள் தனது செல்வாக்கை பயன்படுத்தி எங்களை வீடு கட்ட முடியாத அளவில் தடுப்பு சுவர் எழுப்பி உள்ளார். எனவே அவர் மீதும், எங்களை அவதூறாக பேசி அருள் என்பவருக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படும் காவல் ஆய்வாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவரிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.