அவங்க கொண்டு வந்தா மக்களுக்காக, பிரதமர் கொண்டு வந்தால் ஓட்டுக்காக -தமிழிசை ஆவேசம்
கனவு எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம், இன்று ஒரு நல்ல திட்டம் நினைவாகி இருக்கிறது என இங்கு வந்துள்ளேன்.
வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்த தெலுங்கானா ஆளுநர் மற்றும் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வந்தே பாரத் ரயில் தென்பகுதிக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. ரயில்வே அமைச்சரிடம் தென்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு மிகவும் கஷ்டப்படும் சூழலில் அவர்கள் பலன் பெறும் வகையில் வந்தே பாரத் ரயில் வேண்டும் என கோரிக்கை வைத்தேன். பலர் இது தொடர்பாக கோரிக்கை வைத்தாலும், என்னுடைய முயற்சியும் இதில் இருக்கிறது. நெல்லை ரயில் நிலையம் உணர்வு பூர்வமான ஒரு தொடர்பு உண்டு, படிக்கும் காலத்தில் சென்னையில் இருந்து இங்கு வந்து தான் குமரிக்கு செல்வது நெல்லைக்கு செல்வது. அதனால் மகிழ்ச்சியான ஒன்று. பிரதமர் நாட்டை முன்னேற்றுவதற்காக பல வழியில் முயற்சி செய்து வருகிறார். மக்களால் மறக்கப்பட்ட ஆல் இந்தியா, ரேடியோவில் மன் கி பாத், தபால் நிலையத்தில் செல்வமகள் திட்டம், ரயில் என்றாலே தாமதம் என்று நினைத்து கொண்டிருக்கும் நிலையில் அதிநவீன வசதியுடன் வந்துள்ளது. இது நெல்லைக்கு மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். நான் இன்று ஹைதராபாத்தில் முதல் குடிமகளாக இருந்து இந்த சேவையை கொடி அசைத்து துவக்கி வைக்கும் திட்டம் இருக்கிறது, ஆனால் முதல் குடிமகளாக கலந்து கொள்வதை விட நெல்லையில் சாதாரண குடிமகளாக கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன். மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்..
தொடர்ந்து பேசிய அவர், அரசியல் கனவோடு இப்ப வந்துருக்கேனு சொல்லவில்லை, சின்ன வயதில் தாத்தாவை பார்க்க வந்தது போல் பல நேரங்களில் அரசியல் தலைவராகவும் பல கனவுகளை சுமந்து ரயில் நிலையம் வந்துள்ளேன் என்று தான் கூறினேன். கனவு எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம், இன்று ஒரு நல்ல திட்டம் நினைவாகி இருக்கிறது என இங்கு வந்துள்ளேன். முதல்வர் ஒன்று சொன்னார். குறிப்பாக பிரதமர் 5 T ஐ முன்னிறுத்தினார். என்னவென்றால் Talent, Tourisam, Technology, Trade என இதையெல்லாம் முன்னிறுத்தினார். ஆனால் அதில் எதுவுமே இல்லை என்றார். இந்த அனைத்தையும் முன்னிறுத்தி தான் இந்த வந்தே பாரதம் வந்துள்ளது, ஆக ஸ்டாலின் சொன்ன குற்றச்சாட்டுக்கு வந்தே பாரத் ரயிலே ஒரு உதாரணம். நீங்கள் 9 வருடம் ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் மக்கள் இன்று உணர ஆரம்பித்திருக்கிறார்கள் என்றார்.
மேலும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் குறிப்பாக இந்து மதம் சார்ந்த எந்த நிகழ்வாக இருந்தாலும் அதற்கு அநாவசியமான பல கட்டுபாடுகளை விதிக்கிறார்கள். சனதானத்தை ஒழிப்போம் என நினைப்பவர்கள் கொசுவைக்கூட ஒழிக்க முடியவில்லை. பிரதமர் திட்டம் கொண்டு வருவதற்கு முன் மக்களிடம் அவநம்பிக்கை விதைக்கிறார்கள். அவர்கள் கொண்டு வந்தால் மக்களுக்காக, பிரதமர் எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அது ஓட்டுக்காக என கூறுகிறார்கள். பெண்கள் மசோதாவை ஆண், பெண், சமுதாயம் என அனைவரும் வரவேற்க வேண்டும் என்று தெரிவித்தார். இவர்களுக்கு வேண்டாம் என்றால் ஹிந்தி வேண்டாம், ஆனால் ஹிந்தி பேப்பரில் மகளிருக்கு உதவி தொகை கொடுக்கும் செய்தியை போடுகின்றனர், திராவிடத்திற்காக பேசியவர்கள் எல்லாம் தற்போது இந்தியாவுக்காக பேசுகிறார்கள். தேசிய கட்சிகளின் தாக்கம் வந்திருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி, ஆனால் ஒரு காலத்தில் நீங்கள் எதையெல்லாம் வேண்டாம் என்று அரசியல் செய்து கொண்டிருந்தீர்களோ அதையெல்லாம் நீங்கள் இப்போது நடைமுறைப்படுத்துகிறீர்கள் என்று பேசினார்..