தூத்துக்குடியில் துவங்கியது தண்ணீர் பிரச்னை- 4,5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்
குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அகற்றி கூடுதல் தண்ணீர் வரும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை தினமும் 62 எம்எல்டி குடிநீர் தேவை. ஆனால், தற்போது 20 முதல் 25 எம்எல்டி தண்ணீர் மட்டுமே வருகிறது. இதனால் தினசரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்த பகுதிகளில் தற்போது 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு முறையும், ஒருநாள் விட்டு ஒரு நாள் சப்ளை செய்யப்பட்டு வந்த பகுதிகளில் 4 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறையும் என்ற அளவிலேயே குடிநீர் சப்ளை செய்ய முடிகிறது.ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளதால், மாநகராட்சி பகுதிக்கு வரும் குடிநீரின் அளவும் குறைந்துள்ளது.
எனவே, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி கோடை காலம் முழுவதும் மக்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க மாநகராட்சி சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு தண்ணீர் எடுக்கப்படும் கலியாவூர் நீரேற்று நிலையம் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது நீரேற்று நிலையத்துக்கு தண்ணீர் வரும் பாதையில் அமலைச் செடிகள் அதிகமாக இருப்பதை கண்டு, அவைகளை உடனடியாக அகற்றி, தண்ணீர் வருவதற்கு வசதியாக கூடுதல் பாதைகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அமலைச் செடிகள் அகற்றப்பட்டு, நீரேற்று நிலையத்துக்கு கூடுதல் தண்ணீர் வரும் வகையில் கால்வாய் தோண்டிவிடப்பட்டது.
இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறும்போது, "கடந்த ஆண்டு பருவமழை பெய்த்ததன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. கடந்த மார்ச் 28-ம் தேதி வரை குடிநீர் தட்டுப்பாடும் இல்லாமல் சமாளித்தோம். தற்போது மீண்டும் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் உள்ள அமலைச் செடிகளை பொக்லைன் மூலம் அகற்றி, கால்வாய் தோண்டப்பட்டுள்ளது.அதன் மூலம் தொடர்ந்து 50 நாட்களுக்கு ஓரளவுக்கு பிரச்சினை இல்லை. மேலும், மணிமுத்தாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் கூடுதல் தண்ணீர் வருவதற்கு வாய்ப்புள்ளது.தென்மேற்கு பருவமழை ஜூன் 15-ம் தேதி வாக்கில் தொடங்கி விடும். அதுவரை குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்" என்றார்.