திருநெல்வேலியில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: கால அவகாசம் நீட்டிப்பு! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபாருங்கள்!
நாடு முழுவதும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) தமிழகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த எஸ்.ஐ.ஆர். நடைமுறை புதியதல்ல. சமீபத்தில் பீகார் சட்டமன்றத் தேர்தலின்போதும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது பல தரப்பினரின் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தபோதும், திருத்தப் பணிகள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, தேர்தல் நிறைவுற்றது. இதன் தொடர்ச்சியாகவே, நாடு முழுவதும் இந்த வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழகத்தில் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வாக்கு மைய நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை விநியோகம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைத் திரும்பப் பெறும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டனர். இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து திரும்ப ஒப்படைக்க முதலில் டிசம்பர் 4 வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இவ்வளவு குறுகிய காலத்திற்குள் இவ்வளவு பெரிய பணியைச் செய்து முடிப்பது என்பது களத்தில் பெரும் சவால்களை ஏற்படுத்தும் என்று தமிழக அரசு மற்றும் கேரள அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் SIR திருத்ததிற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுகுமார் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 1.1.2026-ம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தினை (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான கணக்கெடுப்பு காலத்தின் கடைசி தேதியினை 14.12.2025 வரை கால நீட்டிப்பு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர்கள் பட்டியலில் இதுவரை இடம்பெறாத இந்திய குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட படிவம் 6-ல் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்த்திட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றும் (13.12.2025), நாளையும் (14.12.2025) ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள இணையதள முகவரியான voters.eci.gov.in- மூலம் படிவம் 6-ல் விண்ணப்பம் செய்தும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். மேற்சொன்ன முகாம் நடைபெறும் நாட்களில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான படிவம் 6-ஐ வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் இருந்து பெற்றோ இணையதளம் மூலமாகவோ உடனடியாக பூர்த்தி செய்து அளித்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















